Tiruchendur: திருச்செந்தூர் கடலில் குளிக்க பக்தர்களுக்கு திடீர் தடை .. காரணம் என்ன?
Nov 14, 2023, 03:06 PM IST
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் பக்தர்கள் குளிக்க இன்று (நவ.14) திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இன்று பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக அழைக்கப்படுகிறது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில். முருகன் கோயில் அனைத்தும் மலை மீது இருக்கும் நிலையில், கடலுக்கு அருகில் உள்ள தலம் என்பதால் இந்த கோயிலுக்கு என்று தனி சிறப்பு உள்ளது. அறுபடை வீடுகளில் திருச்செந்தூர் மட்டுமே கடலோரம் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. இங்குள்ள கடலில் பக்தர்கள் புனித நீராடிவிட்டு, சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருச்செந்தூரில் நடக்கும் பல்வேறு முக்கிய விழாக்களில் கந்த சஷ்டி திருவிழாவும் பிரசித்தி பெற்றது. இந்தாண்டு கந்த சஷ்டி திருவிழா நேற்று (நவ.13) கோலாகலமாக துவங்கியது.
கந்த சஷ்டி திருவிழா துவக்கத்தை முன்னிட்டு நேற்று திருச்செந்தூரில் திரண்டிருந்த பக்தர்கள் கடலில் புனித நீராடி பச்சை நிறம் ஆடை அணிந்து அங்க பிரதட்சனம் செய்து விரத்தை துவக்கினர்.
கந்த சஷ்டி திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ள நிலையில் கடலில் புனித நீராட பக்தர்களுக்கு இன்று திடீர் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் இன்று பிற்பகல் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் எதிரொலியாக திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து தென்கிழக்கே இந்திய பெருங்கடலில் 1326 கிலோ மீட்டர் தொலைவில், 10 கி.மீ ஆழத்தில் இன்று பிற்பகல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் பக்தர்கள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மிகவும் விசேஷமான கந்த சஷ்டி திருவிழா துவங்கியுள்ள நிலையில், பக்தர்கள் கடலில் புனித நீராட தடைவிதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்