Thai Pusam 2023: பழனி தைப்பூசம்.. பக்தர்களின் கனிவான கவனத்துக்கு..
Feb 02, 2023, 10:45 PM IST
Palani Thai Pusam 2023: தைப்பூசத்தை முன்னிட்டு பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோயிலில், தைப்பூச திருவிழா கடந்த 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பத்து நாட்கள் நடைபெறும் தைப்பூசத் திருவிழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக வருவது வழக்கம். அதன்படி இந்தாண்டு தைப்பூசத் திருவிழா வரும் 5 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் திண்டுக்கல், கோவை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பழனி மலை கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
பாதையாத்திரை பக்தர்கள் மட்டுமின்றி உள்ளூர் பக்தர்கள் வருகையும் அதிகரித்துள்ளது. அலகு குத்தியும், காவடி எடுத்தும் ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். பல்வேறு விதமான காவடி எடுத்து வரும் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் முருகனை தரிசித்து வருகின்றனர்.
இந்நிலையில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் விரைவாக மலைக்கு சென்று திரும்ப ஏதுவாக, திருக்கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக நாளை 03.02.2023 முதல் 05.02.2023 வரை மலைக்கோயிலுக்கு செல்லும் பாதை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
குடமுழக்கு நினைவரங்கம் வழியாக யானை பாதையை இணைத்து ஒரு வழியாகவும், மலைக் கோயிலில் இருந்து படிப்பாதை வழியாக கீழே இறங்கும் வகையில் ஒருவழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தைப்பூச தினத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வரும் 5 ஆம் தேதி வரை மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட இடங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
டாபிக்ஸ்