Tiruvannamalai: மாமியாரை கூலிப்படை வைத்து கொலை செய்த மருமகளுக்கு என்ன தண்டனை தெரியுமா?- மகிளா கோர்ட் பரபரப்பு தீர்ப்பு!
May 22, 2024, 06:47 AM IST
Tiruvannamalai, Crime: குடும்பத் தகராறில் கூலிப்படை வைத்து மாமியாரை கொலை செய்த வழக்கில் மருமகள் உள்ளிட்ட 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை மகிளா நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
Tiruvannamalai: திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட தாமரை நகர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் மனைவி ஆதிலட்சுமி (வயது 60).ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் வீட்டில் தனியாக இருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வீட்டினுள் புகுந்து அவரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றனர். இதில் படுகாயம் அடைந்த ஆதிலட்சுமி திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருவண்ணாமலை காவல்துறை விசாரணை
இந்த கொலை தொடர்பாக திருவண்ணாமலை நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்த ஆதிலட்சுமியின் மகன் சிவசங்கர் என்பவருக்கும், சென்னையை சேர்ந்த சத்தியா என்பவருக்கும் திருமணம் நடந்தது. மாமியார் ஆதிலட்சுமிக்கும், அவரது மருமகள் சத்தியாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தனிக் குடித்தனம் தொடர்பாக அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. இதுகுறித்து சென்னை கொரட்டூரில் உள்ள அவரது அண்ணன் பிரபுவிடம் சத்தியா கூறியுள்ளார்.
கூலிப்படை ஏவி கொலை
இதையடுத்து பிரபு கூறிய ஆலோசனை படி திருவண்ணாமலையை சேர்ந்த கூலி படையினர் ஆனஸ்ட்ராஜ், சரண், பத்திரிநாராயணன், முகமதுஅலி ஆகியோர் ஆதிலட்சுமியை தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, ஆதிலட்சுமியின் மருமகள் சத்தியா, அவரது அண்ணன் சென்னை கொரட்டூரை சேர்ந்த சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் பிரபு, திருவண்ணாமலை சமுத்திரம் நகரை சேர்ந்த ஆனஸ்ட்ராஜ், செல்வம் மகன் சரண்ராஜ், ராமலிங்கனார் தெருவை சேர்ந்த பத்ரி நாராயணன், துராபலி தெருவை சேர்ந்த முகமதுஅலி ஆகிய 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில், சிறப்பு குற்ற பொது வழக்கறிஞர் வீணாதேவி ஆஜரானார்.
மகிளா கோர்ட் தீர்ப்பு
இந்த நிலையில் நேற்று (மே 20) இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த மகிளா கோர்ட் நீதிபதி கே.சுஜாதா நேற்று பரபரப்பு தீர்ப்பளித்தார். அதில், கூலிப்படையை ஏவி மாமியாரை கொலை செய்த குற்றவாளிகளான சத்தியாவின் அண்ணன் பிரபு, கூலிப்படையை சேர்ந்த ஆனஸ்ட்ராஜ், சரண், பத்திரிநாராயணன், முகமது அலி ஆகியோருக்கு தலா இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 3 ஆயிரம் அபராதமும், மருமகள் சத்தியாவிற்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். பின்னர் அவர்களை போலீசார் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து சென்று சிறையில் அடைத்தனர்.
தனிக்குடித்தனம் செல்வது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கூலிப்படை வைத்து மாமியாரை கொலை செய்த வழக்கில் மருமகள் உள்ளிட்ட 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை மகிளா நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்