Sankaraiah: ‘பேரிடி! சங்கரய்யா முதல் ஆச்சார்யா வரை!’ 2 நாட்களில் இரு பெரும் தலைவர்களை இழந்த CPIM!
Nov 15, 2023, 11:27 AM IST
”சுதந்திர போராட்டம், தொழிலாளர் உரிமைகள், விவசாயிகள் பாதுகாப்பு என எளிய மக்களின் உரிமைகளுக்காக போராடிய இருபெரும் தலைவர்களின் இழப்பு இடதுசாரி இயக்கங்களை சார்ந்தவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது”
கடந்த இரண்டு நாட்களில் இரண்டு மூத்த தலைவர்கள் மறைந்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அதன் தொண்டர்களுக்கும் பேரிழப்பாக பார்க்கப்படுகிறது.
கடந்த நவம்பர் 13ஆம் தேதி அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், பங்குரா மக்களவை தொகுதியில் 9 முறை எம்.பியாகவும் இருந்த பாசுதேப் ஆச்சார்யா தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.
இந்த நிலையில் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவரும், இந்திய சுதந்திர போராட்ட தியாகியுமான என்.சங்கரய்யா காலமாகி உள்ளார்.
தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட பசுதேப் ஆச்சார்யா
1942ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதி மேற்கு வங்கத்தில் உள்ள புருலியாவில் பிறந்த பாசுதேப் ஆச்சார்யா பெங்காலி-தமிழ் தொடர்புடைய இடதுசாரி அரசியல்தலைவராக அறியப்படுகிறார். அவரது முன்னோர்கள் கடந்த 16ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் இருந்து மேற்கு வங்கத்தில் குடியேறியதாக தெரிகிறது.
தனது மாணவ பருவத்திலேயே இடதுசாரி இயக்கத்தில் பற்று கொண்ட அவர், பல்வேறு பழங்குடி இயக்களில் இணைந்து எழுத்தறிவு பரப்புரைகளில் ஈடுபட்டார்.
1980ஆம் ஆண்டு பங்குரா மக்களவை தொகுதியில் இருந்து முதல்முறையாக எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் 2014ஆம் ஆண்டு வரை தொடர்ந்து அத்தொகுதியில் எம்.பியாக இருந்தார்.
என்.சங்கரய்யா
தூத்துக்குடி மாவட்டம் கோயில்பட்டியில் 1921ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பிறந்த சங்கராய்யா, இளம் வயதிலேயே இந்தியாவில் பரவிக்கொண்டிருந்த பொதுவுடமை கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். மதுரை அமெரிக்கன்கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது மாணவர் மன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட அவர், இந்திய விடுதலை போராட்டத்தில் கலந்து கொண்டு பிரிட்டீஷ் அரசை எதிர்த்து போராட தொடங்கினார். இதனால் 1941ஆம் ஆண்டில் கல்லூரி இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும்போதே ஆங்கிலேயே அரசால் சங்கரய்யா கைது செய்யப்பட்டார்.
8 ஆண்டுகால சிறை வாழ்க்கைக்கு பிறகு 1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகுதான் விடுதலை செய்யப்பட்டார்.
1964ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டாக பிரிந்தபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தொடங்கியவர்களில் முக்கியமானவர்களில் ஒருவராக சங்கரய்யா உள்ளார்.
1995ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளராக இருந்த சங்கரய்யா, 1967ஆம் ஆண்டில் மதுரை மேற்கு தொகுதியில் இருந்தும், 1977, 1980 ஆகிய தேர்தல்களில் மதுரை கிழக்கு தொகுதியில் இருந்தும் சட்டமன்றத்திற்கு தேர்வானார். 1957 மற்றும் 1962 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தலிகளில் போட்டியிட்டு சங்கரய்யா வெற்றி வாய்ப்பையும் இழந்துள்ளார்.
சுதந்திர போராட்டம், தொழிலாளர் உரிமைகள், விவசாயிகள் பாதுகாப்பு என எளிய மக்களின் உரிமைகளுக்காக போராடிய இருபெரும் தலைவர்களின் இழப்பு இடதுசாரி இயக்கங்களை சார்ந்தவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.