OPS vs EPS: ’ஊர்ந்து ஊர்ந்து முதலமைச்சர் ஆனவர் ஈபிஎஸ்!’ கலாய்க்கும் ஓபிஎஸ்!
Jan 04, 2024, 03:15 PM IST
”பதவி கொடுத்த சின்னமா அவர்களையே தரக்குறைவான வார்த்தையில் பேசி நம்பிக்கை துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி”
நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக காஞ்சிபுரத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி அவர்கள் தாமாக முன் வந்து பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்யும் வரை எங்கள் போராட்டம் தொடரும். தமிழ்நாட்டில் உள்ள அத்தனை தொண்டர்களும் வெகுண்டெழுந்து சட்டவிதிகளை எப்படி மாற்றலாம் என கூறி கடும் கோபத்தில் உள்ளனர்.
திரு எடப்பாடி பழனிசாமி இந்த கட்சியை தொடங்கினாரா?; வளர்த்தாரா?; தியாகம் செய்தாரா?; எதுவும் இல்லை. முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி எப்படி ஊர்ந்து, ஊர்ந்து பதவி வாங்கினார் என்பதை இந்திய திருநாடே கூர்ந்து கவனித்தது.
பதவி கொடுத்த சின்னமா அவர்களையே தரக்குறைவான வார்த்தையில் பேசி நம்பிக்கை துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி.
முதல் தர்மயுத்தத்தில் கழகத்தை இணைத்தோம். ஆட்சிக்கு ஒரு சோதனை வரும் போது ஓபிஎஸ் ஆதரவு அவர்களுக்கு தேவையாக இருந்தது. ஓபிஎஸ் ஆதரவு இருந்தால்தான் அந்த ஆட்சி 5 ஓட்டில் காப்பாற்றப்பட்டது.
எதிர்த்து நான் ஓட்டு அளித்திருந்தால் அவரால் முதலமைச்சர் ஆகி இருக்க முடியாது. தொண்டர்களால் உருவான இயக்கத்தை தான் மட்டுமே எல்லா பதவியும் கையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்.
இதற்கெல்லாம் முடிவுக்கட்டி நம்முடைய இயக்கம் தொண்டர்களின் உரிமையை மீட்கும் களமாக உள்ளது. மிட்டாதாரர்கள், மிராசுதாரர்களுக்குதான் பட்டம் பதவி இல்லை; அனைவரும் பதவிக்கு வர வேண்டும் என்று எம்ஜிஆர் அவர்கள் விரும்பினார்கள் என ஓபிஎஸ் பேசினார்.