Sanathanam: ‘சனாதனம் என்றால் அறம்!’ அரசின் பாடபுத்தகத்தால் வெடித்தது சர்ச்சை!
Sep 12, 2023, 04:04 PM IST
”சனாதன தர்மம் என்றால் நிலையான அழிவில்லாத அறம் என தமிழ்நாடு அரசின் பாடபுத்தக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது”
கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட ‘சனாதன ஒழிப்பு மாநாட்டில்’ திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது “இந்த மாநாட்டின் தலைப்பில் சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டு இருக்கிறீர்கள்.
சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும்; எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதைஎல்லாம் நாம் எதிர்க்க கூடாது ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். சனாதனம் என்பது சமத்துவத்திற்கு சமூகநீதிக்கும் எதிரானது” என கூறி இருந்தார்.
உதயநிதி பேச்சுக்கு எதிர்ப்பு
உதயநிதியின் இந்த பேச்சு நாடு முழுவதும் உள்ள பாஜகவினர் இடையே கடும் கண்டனத்தை பெற்றுத்தந்தது. அயோத்தியை சேர்ந்த சாமியார் ஒருவர் உதயநிதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்ததுடன் அவரது தலையை கொண்டு வருவோருக்கு 10 கோடி ரூபாய் பரிசையும் அறிவித்தார்.
இதற்கு பதில் அளித்திருந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘என் தலையை சீவ 10 கோடி தேவையில்லை; 10 ரூபாய் சீப்பு போதும் என்றும் சனாதனம் குறித்த பேச்சுக்கு மன்னிப்பு கேட்க முடியாது’ என்றும் கூறினார்.
’கொசுவர்த்தி சுருள்’
சனாதன சர்ச்சை இன்னும் ஓயாத நிலையில் நேற்றைய தினம் கொசுவர்த்தி சுருளின் படம் ஒன்றை உதயநிதி ஸ்டாலின் ’எக்ஸ்’ சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார்.
இதனை பகிர்ந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ’நீ விளையாடு நண்பா’ என பதிவிட்டு இருந்தார்.
பாடப்புத்தகத்தில் சர்ச்சை
ஆனால் அவரது துறையான பள்ளிக்கல்வித்துறையில் 12ஆம் வகுப்பு பாடப்புத்தக்கத்தில் சனாதனத்தை ‘அழிவில்லாத நிலையான அறம்’ என குறிப்பிடப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை கிளப்பி உள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பில் 2022ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புதிய பாடத்திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்புக்கான 'அறவியலும் இந்தியப் பண்பாடும்' என்ற பாடத்தில், ‘இந்தியப் பண்பாடும் சமயங்களும்’ என்ற தலைப்பின் கீழ் ‘இந்து சமயம்’ சனாதன தர்மம், வேத சமயம், வைதிக சமயம் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. ‘சனாதன தருமம்’ என்றால் ‘அழிவில்லாத நிலையான அறம்’ எனப்படும். இது வேதனங்களை அடிப்படையாக கொண்டு இயங்குவதால் ‘வேதசமயம்’ என்றும், வேதநெறிகளையும் சாத்திரங்களையும் மையமாகக் கொண்டுள்ளதால் வைதீக சமயம் எனவும் அழைக்கப்படுகிறது.
அதே போல, இந்து சமயம் ஒவ்வொரு இந்துவுக்கும் தனிமனிதக் கடமைகள் (ஆசிரம தர்மம்), சமூகக் கடமைகள் (வர்ணாஸ்ரம தர்மம்) என இரு கடமைகளை வலியுறுத்துகிறது. இது சமயம் ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் சார்ந்து இருக்கும் சமூகத்துக்கென சில கடமைகளை ஆற்ற வேண்டும் என குறிப்பிடப்படுகிறது. இந்து சமயம், ஒவ்வொரு மனிதனும் அவன் சார்ந்து இருக்கும் சமூகத்துக்கென சில கடமைகளை ஆற்ற வேண்உம் என குறிப்பிடப்படுகிறது. அதன் அடிப்படையில் சமூகம் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தது. அவை பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் ஆவர். இவை சமூகத்திற்கான கடமைகளேயாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சனாததன தர்மம் சாதிய பாகுப்பாட்டை வலியுறுத்துவதாக திமுகவும் அக்கட்சியை சேர்ந்த அமைச்சர்களும் பேசி வரும் நிலையில் சனாதனத்தை ‘அறம்’ என்று தமிழ்நாடு அரசுப்பாடப்புத்தக்கத்தை குறிப்பிட்டிருப்பது புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.