Alanganallur Jallikattu: உதயநிதி உடன் ஜல்லிக்கட்டு பார்த்த சினிமா பிரபலங்கள்! நிரம்பி வழிந்த விஐபி கேலரி!
Jan 17, 2024, 12:06 PM IST
”Alanganallur Jallikattu 2024: தொடர் சினிமா பிரபலங்கள் வருகையால் பார்வையாளர்கள் மாடம் நிறைந்து காணப்பட்டது”
காணும் பொங்கல் திருநாளையொட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி ஏற்றனர்.
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நேற்று முன் தினமும், பாலமேட்டில் நேற்றும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
வாடிவாசலில் இருந்து முதலில் மூன்று காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. பின்னர் தேர்வு செய்யப்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தம் 1200 காளைகளும், 800 வீரர்களும் தேர்வு செய்யபப்ட்டுள்ளனர்.
இந்த போட்டியில் முதலிடம் பிடிக்கும் மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் கார்கள் பரிசாக வழங்கப்பட உள்ளது.
ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெறும் காளைகளுக்கும், வீரர்களுக்கும் தங்ககாசுகள், இருசக்கர வாகனங்கள், சைக்கிள்கள், பசு கன்றுகள், பிரோ, கட்டில், மெத்தை, தங்கக்காசுகள், பட்டுப்புடவைகள் உள்ளிட்ட பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த நடிகர்கள் அருண் விஜய், சூரி, இயக்குநர் ஏ.எல்.விஜய் ஊடகவியலாளர் நீயா நானா கோபிநாத் உள்ளிட்டோர் விஐபிகள் மாடத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அருகில் அமர்ந்து பார்வையிட்டனர். தொடர் சினிமா பிரபலங்கள் வருகையால் பார்வையாளர்கள் மாடம் நிறைந்து காணப்பட்டது.