Christmas 2023: களைகட்டிய கிறிஸ்துமஸ்.. தமிழக முழுவதும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை!
Dec 25, 2023, 07:57 AM IST
Christmas Festival 2023: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. நள்ளிரவில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானோர் பங்கேற்றனா்.
கிறிஸ்தவா்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கிறிஸ்துமஸ் விழா உலகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள தேவாலயங்களிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை களைகட்டி காணப்பட்டது. நள்ளிரவு முதலே தேவாலயங்களில் குவிந்த ஏராளமானோர் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். மேலும், ஒருவருக்கு ஒருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.
உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. நள்ளிரவில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் வெளிநாட்டினர் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனா். கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக வேளாங்கண்ணி பேராலயம் மற்றும் நகர் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.
இதேபோல் சென்னை சாந்தோம் தேவாலயத்தில் நள்ளிரவில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் குடும்பம் குடும்பமாக ஏராளமானோர் பங்கேற்று வழிபாடு நடத்தினா். கிறிஸ்துமஸ் விழாவையொட்டி சென்னை, கிண்டி அருகே பரங்கிமலையில் அமைந்துள்ள 500 ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்பு மிக்க புனித தோமையார் தேவாலயம் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
தூத்துக்குடியில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெற்றது. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று வழிபாடு நடத்தினர். சமத்துவம், சகோதரத்துவம் தழைத்தோங்க, கோவையில் மும்மதத்தார் இணைந்து'சமத்துவ கிறிஸ்துமஸ் விழா' கொண்டாடினா். பல்சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழாவில் ஃபாதர் ஜோசஃப் தன்ராஜ், பேரூர் ஆதினம் உமாபதி சிவ தம்பிரான், மெளலவி எம்.அப்துர் ரகுமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருச்சி, மதுரை, சேல உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி அனைத்து தேவாலயங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டதோடு, இயேசு பிறந்ததை சித்தரிக்கும் வகையில் ஆட்டு கொட்டகையுடன் கூடிய குடிலும் அமைக்கப்பட்டு இருந்தது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்