Veerapandiyar: ’என் அண்ணன் வீரபாண்டியார்’ சேலத்தில் செண்டிமண்ட்டாக பேசிய ஸ்டாலின்! சிலிர்த்த உடன்பிறப்புகள்!
Jun 10, 2023, 08:15 PM IST
"கழகத்திற்கு தொண்டனுக்கு தொண்டராய் இருந்து, செயல்வீரருக்கு செயல்வீரராய் களத்தில் முதல் போர் வீரனாய் இருந்து மறைந்த அண்ணன் வீரபாண்டியாரின் சேலத்தில் இந்த கூட்டம் நடக்கிறது"
நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட திமுக சார்பில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேசுகையில், நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள தேர்தலில் நான் கலந்து கொள்ளக்கூடிய முதல் மாவட்ட கழக கூட்டமாக இந்த ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட கழக கூட்டம் அமைந்துள்ளது.
கழகத்திற்கு தொண்டனுக்கு தொண்டராய் இருந்து, செயல்வீரருக்கு செயல்வீரராய் களத்தில் முதல் போர் வீரனாய் இருந்து மறைந்த அண்ணன் வீரபாண்டியாரின் சேலத்தில் இந்த கூட்டம் நடக்கிறது. சுயமரியாதை இயக்கமும் நீதிக்கட்சியும் இணைக்கப்பட்டு திராவிடர் கழகம் உருவான ஊர் இந்த சேலம். அண்ணா அவர்களால் கொண்டு வரப்பட்ட்ட அண்ணாதுரை தீர்மானம் சேலத்தில்தான் திராவிடர் கழகத்தை உருவாக்கிது.
எனது வாழ்வில் மறக்க முடியாத ஊர் இந்த சேலம். 1996 ஆம் ஆண்டு நாம் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அதற்கு அடுத்த ஆண்டு 1997 ஆம் ஆண்டு இதே சேலத்தில் மாநாடு மூன்று நாட்கள் நடந்தது. அந்த மாநாட்டில் எனக்கு மிகப்பெரிய பெருமை கிடைத்தது; அதில் பெருமை ஏற்படுத்தி தந்தவர் அண்ணன் வீரபாண்டியார். பல்லாயிரக்கணக்கான கழக தொண்டர்கள் அணி வகுப்பை தலைமை தாங்கி நடத்தி வைக்கும் பொறுப்பை அவர் எனக்கு தந்தார். மாலை 5 மணிக்கு நடந்த பேரணி மறுநாள் காலை 8 மணி வரை தொடர்ந்து நடந்தது. அப்படிப்பட்ட மாபெரும் பேரணிக்கு தலைமை தாங்கும் வாய்ப்பு இந்த அடியேனுக்கு கிடைத்ததை எண்ணி பெருமைப்படுகிறேன்.
1997ஆம் ஆண்டு நடந்த சேலம் மாநாட்டில் பேரணிக்கு தலைமை ஏற்ற நான் 2004-இல் நடந்த மாநாட்டில் ஐம்பதடி உயரத்தில் கொடியேற்ற வாய்ப்பு தந்தார் அண்ணன் வீரபாண்டியார். அந்த நினைவலைகளில் நீந்தியவனாக நான் உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன்.
கலைஞர் நூற்றாண்டை இந்த ஆண்டு முழுவதும் கொண்டாட உள்ளோம். ஊர்கள் தோறும் திமுக என்ற தலைப்பில் ஒவ்வொரு ஊரிலும் கழக கம்பங்களை புதுப்பிக்க வேண்டும். கழகமே குடும்பம் என்ற தலைப்பில் முன்னோடிகள் குடும்பங்களை முன்னேற்ற வேண்டும்.
வர உள்ள நாடாளுமன்றத்தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம் வெல்வதற்கு அச்சாரமிடும் செயல்வீரர்கள் கூட்டம்தான் இந்த கூட்டம். அதுவும் உறுதியாக சேலத்தில் மாபெரும் வெற்றியை பெற வேண்டும். அதற்காகத்தான் முதன்மை செயலாளர் நேரு அவர்களை சேலத்திற்கு அனுப்பி வைத்துள்ளேன். அவரை பொறுத்தவரை திருச்சியில் உள்ளாட்சி தேர்தலாக இருந்தாலும் சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் நூற்றுக்கு நூறு மார்க் எடுத்தவர்.
நான் கடந்த முப்பெரும் விழாவில் நாடும் நமதே நாற்பதும் நமதே என்று; அந்த லட்சிய முழக்கத்தை சேலத்தில் உரக்க செல்வதற்காகத்தான் வந்துள்ளேன். பத்தாண்டு கால அதிமுகவை அகற்றிவிட்டு மக்கள் நம்மிடும் கொடுத்துள்ள ஆட்சி நடந்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நமது கழகத்தின் செயல்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. கட்சியில் மிகத் தீவிரமான பணிகள் தற்போது நடந்து வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 69ஆயிரம் வாக்குச்சாவடிகளில் பொறுப்பாளர்களை நியமித்துள்ளோம், அதற்கான பூத் கமிட்டி உறுப்பினர்களையும் நியமித்துள்ளோம். தொலைபேசி மூலம் தனித்தனியாக அழைத்து பேச சொல்லி உள்ளேன். பூத் மட்ட அளவில் இவ்வுளவு வலுவான கட்டமைப்பு கொண்ட கட்சி இந்தியாவிலே என்ன உலகத்திலே எந்த கட்சியும் இருக்க முடியாது.
இனி இந்த மண்ணில் எந்த காலத்திலும் எந்த நிலையிலும் வீழ்த்த முடியாது என்ற நிலையை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகியநான் உருவாக்கி கொண்டுள்ளேன். உங்கள் உழைப்பு வீண் போகாது; உழைப்புக்கேற்ற அங்கீகாரம் உங்களை வந்து சேரும், நான் இருக்கிறேன் கவலைப்படாதீர்கள்.
டாபிக்ஸ்