Chennai Rains: 'சினிமா டைலாக் பேசி க்ளாப்ஸ் வாங்குற விஷயம் இல்லை!’ விஷாலுக்கு சென்னை மேயர் பிரியா பதிலடி!
Dec 05, 2023, 07:16 AM IST
”Chennai Rains: அரசியல் செய்ய முயலாமல் கோரிக்கை ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவும். அரசு நிறைவேற்றித் தரும்!”
மழைநீர் சேமிப்பு, வடிகால் தொடர்பான சென்னை மாநகராட்சியின் திட்டம் என்ன ஆனது? என கேள்வி எழுப்பிய நடிகர் விஷாலுக்கு சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.
மிக்ஜாங் புயல் காரணமாக சென்னையில் நேற்று முன் தினம் இரவு முதல் விடிய விடிய மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மாநகரம் முழுவதும் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நடிகர் விஷால் சென்னை மாநகராட்சியின் செயல்பாடுகளை கேள்வி எழுப்பி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், "வணக்கம். புயல், மழையால் முதலில் மின்சாரம் துண்டிக்கப்படும். அதன்பிறகு தண்ணீர் தேங்க ஆரம்பிக்கும். பின்னர், தண்ணீர் வீட்டுக்குள் நுழைந்துவிடும் என்பது வழக்கமான விஷயம். அதேபோல தான் அண்ணா நகரில் இருக்கும் என்னுடைய வீட்டில் தண்ணீர் நுழைந்துவிட்டது. அண்ணா நகரிலேயே இந்த கதி என்றால் மற்ற இடங்களில் யோசித்துப் பாருங்கள். 2015ஆம் ஆண்டு நடக்கும்போது எல்லோரும் இறங்கி வேலை செய்தோம். முடிந்த அளவுக்கு பொதுமக்களுக்கு சேவை செய்தோம்.
8 ஆண்டுகளுக்கு பிறகும் அதைவிட மோசமாக இருப்பது கேள்விக்குறியாக உள்ளது. மழைநீர் சேமிப்பு, வடிகால் தொடர்பான சென்னை மாநகராட்சியின் திட்டம் என்ன ஆனது? என்பது தெரியவில்லை. இது ஒரு விண்ணப்பம் தான். நான் ஒரு வாக்காளர் என்ற முறையில் இதனை கேட்டுக் கொள்கிறேன். சென்னை தொகுதி எம்எல்ஏக்கள் தயவு செய்து வெளியில் வந்து சரிசெய்து கொடுத்தால் நன்றாக இருக்கும். அந்தந்த தொகுதி எம்எல்ஏக்கள் வெளியே வந்து உதவினால் பொதுமக்களுக்கு பாதுகாப்பாகவும் நம்பிக்கையாகவும் இருக்கும்.
என் வீட்டில் இருக்கும் சீனியர் சிட்டிசன்களான எனது அப்பா, அம்மா பயத்தில் உள்ளனர். சின்ன மழைக்கே தண்ணீர் தேங்கும். ஆனால், இப்போது எல்லா இடத்திலும் தண்ணீர் தேங்கியிருப்பது தர்மசங்கடமான, கேவலமான ஒரு விஷயமாக பார்க்கிறேன். தயவு செய்து உடனடியாக இதனை சரி செய்ய மாநகராட்சி முன்வர வேண்டும். எதற்காக வரி கட்டுகிறோம் என கேட்க வைத்துவிடாதீர்கள். வந்து உதவுங்கள்." என கூறி இருந்தார்.
நடிகர் விஷாலின் வீடியோவுக்கு சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன் பதிலடி கொடுத்துள்ளார். அதில், ”அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் களத்தில் நின்று அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும், மாநகராட்சி ஊழியர்களும் செய்து வருகிறார்கள். அரசியல் செய்ய முயலாமல் கோரிக்கை ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவும். அரசு நிறைவேற்றித் தரும்!
2015 அம்மையார் ஜெயலலிதா ஆட்சியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை விட மோசமான நிலை இப்போது ஏற்பட்டிருப்பது போல நடிகர் விஷால் சொல்லியிருக்கிறார். திரைப்பட வசனம் போல பேசிவிட்டு கைத்தட்டல் வாங்க முயற்சிக்கும் விஷயம் இல்லை இந்த பேரிடர்!”