Chennai Floods 2023: ’வேளச்சேரி வெள்ளத்திற்கு ஆக்கிரமிப்பு காரணம் இல்லையா?’ அமைச்சர் மா.சுப்பிரமணியன் வினோத விளக்கம்!
Dec 10, 2023, 09:56 AM IST
“Chennai Floods 2023: ஜெயக்குமார் வெறும் கரண்டியை சுழற்றி கொண்டு இருப்பவர். அவருக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை”
சென்னை சைதாப்பேட்டையில் அடையாற்றங்கரை ஓரம் வசிக்கும் மக்களுக்கு பருவமழை சிறப்பு மருத்துவ முகாம்களை தொடங்கி வைத்த பின்னர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வெள்ளபாதிப்புகள் குறித்து பேசி எடப்பாடி பழனிசாமிக்கு, ஜெயக்குமாருக்கும் தார்மீக உரிமை இல்லை. ஜெயக்குமார் வெறும் கரண்டியை சுழற்றி கொண்டு இருப்பவர். அவருக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
சென்னையில் கட்டப்பட்ட மழைநீர் வடிகால் மூலம் நீர் அணைத்தும் வடிந்துவிட்டது. முன்னதாக கொசஸ்தலை, அடையாறு, கூவம், பக்கிஹாம் கால்வாயில் சென்னையின் மழைநீரை கடல் உள்வாங்கவில்லை. இதனால் ஒருநாள் முழுவதும் தண்ணீர் தேங்கி நின்றது. பின்னர் மழைநீர் கடலுக்கு செல்லத் தொடங்கிய உடனே வெள்ளம் குறையத் தொடங்கியது.
தாழ்வான பகுதிகளில் உள்ள தண்ணீர் மோட்டார் மூலம் நீர் அகற்றப்பட்டுள்ளது. வேளச்சேரி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், உள்ளகரம் பகுதிகள் பாதிக்க காரணம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 40க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி உபரிநீர் வந்ததே காரணம்.
வேறு எந்த பருவமழையோடும் ஒப்பிட்டு பார்க்க முடியாத அளவில், 5 நாட்களில் 58 செ.மீ மழை பெய்துள்ளது. இதனால் வந்த தேக்கமே தவிர ஆக்கிரமிப்பு, கால்வாய் பணிகள் முடியவில்லை என்று சொல்வதற்கு முன் இந்த ஆக்கிரமிப்பால் தண்ணீர் செல்லவில்லை என்று காட்டினால் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம்.
அரசு அறிவித்த 6 ஆயிரம் நிவாரணம் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் நிச்சயம் நிவாரணம் கிடைக்கும். பாதிப்பு அடைந்தவர்கள் ஒருவர் கூட விடுப்பட்டமாட்டார்கள்.