Madurai Metro Rail: வைகை ஆற்றின் கீழ் சுரங்க பாதை! வெளியான முழு தகவல்
Apr 06, 2023, 06:55 PM IST
மதுரை மெட்ரோ ரயில்வே திட்டத்துக்கான அறிக்கை ஜூன் மாதம் முடிக்கப்பட்டு, 2024ஆம் ஆண்டு இறுதியில் கட்டுமான பணிகள் தொடங்கும் என மெட்ரோ ரயில்வே நிர்வாக இயக்குநர் சித்திக் தெரிவித்துள்ளார்.
மதுரையில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரையிலான 31.30 கிலோ மீட்டர் தொலைவுக்கு 18 நிலையங்களுடன் கூடிய மெட்ரோ ரயில் சேவை செயல்படுத்துவதற்கான பணிகளை சென்னை மெட்ரோ ரயில்வே நிறுவனம் மேற்கொண்டிருக்கிறது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை ஆர்.வி.அசோசியேட்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த திட்டத்துக்கு நடப்பு நிதிநிலை அறிக்கையில் ரூ.8,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் மெட்ரோ ரயில்வே நிர்வாக இயக்குநர் சித்திக் தலைமையில் இன்று நடைபெற்றது.
மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜீத் சிங், மதுரை மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் அர்ஜூனன், மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஆனந்த் பதம்னாபன் மற்றும் வருவாய், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை, காவல்துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் உயர் அலுவலர்கள் பலரும் பங்கேற்றனர்.
ஆலோசனை கூட்டத்தில் மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் சித்திக் பேசுகையில்,
"100 ஆண்டுக்கான தொலைநோக்கு பார்வையுடன் மதுரை மெட்ரோ ரயில்வே திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
2027ஆம் ஆண்டு இறுதிக்குள் கட்டுமான பணிகளை நிறைவு செய்ய வேண்டும். நிலம் இருக்கிறது என்பதற்காக அங்கு நிலையம் அமைக்காமல், மக்களின் போக்குவரத்து தேவையின் அடிப்படையில் அவற்றை அமைக்க வேண்டும்.
மதுரை ரயில் நிலையம் - பெரியார் பேருந்து நிலையம் - மீனாட்சி அம்மன் கோயில் ஆகிய மூன்று பகுதிகளையும் இணைக்கும் வகையில் ஒரு நிலையம் அமைக்கப்பட வேண்டும்.
விமான நிலையத்தை இணைக்கும் வழித்தட திட்டம் இப்போதைக்கு இல்லை. ஆனால் அவரை இரண்டாம் கட்ட வழித்தடத்தில் இடம்பெறும்" என்றார்.
இந்த கூட்டத்துக்கு பின்னர் மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் சித்திக் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில்,
"மதுரை மெட்ரோ ரயில்வே திட்டத்துக்கு முன்னுரிமை அளித்து பணிகளை துரிதப்படுத்த அரசு அறிவுறுத்தி உள்ளது.
மதுரை தொன்மையான ஊர் என்பதால் இங்கு நகர் பகுதிக்குள் அமையும் வழித்தடம் பூமிக்கு கீழே சுரங்கப்பாதை வடிவில் அமைக்கப்பட உள்ளது.
மீனாட்சி அம்மன் கோயிலை முன்வைத்து கோரிப்பாளையம் முதல் வசந்த நகர் வரையிலான வழித்தடம் வைகை ஆற்றுக்கு கீழே சுரங்கப்பாதையில் அமையும்.
திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரையிலான 31 கிமீ வழித்தடத்தில், 26 கிமீ மேம்பாலமாகவும், 5 கிமீ பூமிக்கு அடியிலும் கட்டமைக்கப்பட்ட உள்ளது. மொத்தம் 18 நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
இந்த திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையை ஜூன் மாதத்துக்குள் முடித்து அறிக்கையை அரசுக்கு அனுப்ப வேண்டும்.
2024ஆம் ஆண்டு இறுதியில் கட்டுமான பணிகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய - மாநில அரசுகள் 20% + 20% நிதியும், நிதி நிறுவனங்கள் 60% நிதி பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
முதற்கட்டமாக 3 பெட்டிகளுடன், 5 முதல் 10 நிமிட இடைவெளியில் ரயில்கள் இந்த வழித்தடங்களில் இயக்கப்படும்"
இவ்வாறு அவர் கூறினார்.