Cauvery Water Issue: ‘கர்நாடகா என்ன பாகிஸ்தானா? ரஜினி பேசணும், திமுக பேசாதா?’ ரங்கராஜ் பாண்டே ஆவேசம்!
Oct 02, 2023, 11:36 AM IST
Rangaraj Pandey: ‘கர்நாடகாவில் பாஜக இருந்த போது, 5 ஆண்டு எப்படி தண்ணீர் வந்தது? என்று கேட்டால் அதற்கு பதிலே இல்லை. இங்கு அதிமுக அரசு இருந்த போது, பாஜக அரசு அங்கே இருந்த போது ஏன் பிரச்னை வரவில்லை? அதற்கு பதில் வேண்டும்’
காவிரி விவகாரம் குறித்தும், அது தொடர்பான ரியாக்ஷன்ஸ் குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பிரபல ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே அளித்த பேட்டி, கவனம் பெற்று வருகிறது. இதோ அந்த பேட்டி:
‘‘காவிரிக்கு எத்தனை நாள் சட்டப்போராட்டம் நடத்தப்போகிறார்கள்? இதற்கு பதில் சொல்ல வேண்டியது, தமிழ்நாட்டிற்கு தமிழக அரசு, கர்நாடகத்திற்கு கர்நாடக அரசு. இரண்டுமே I.N.D.I.A கூட்டணியில் இருக்கும் கட்சிகள் தான்.
ஒரே கூட்டணியில் இருக்கும் இரு நட்பு கட்சிகள், சோனியா, ராகுல், உதயநிதி எல்லாரிடமும் நல்ல புரிதல் இருக்கிறது. ஒரு சாதாரண விசயம், போனில் முடிக்கலாம். ஏதோ சம்மந்தமே இல்லாதபடி, இந்தியா-பாகிஸ்தான் விவகாரம் மாதிரி இதை கையாள்கிறார்கள்.
கர்நாடகா பாகிஸ்தானா?
பாகிஸ்தானிடம் பேச்சு வார்த்தை நடத்துவதில் ஒரு சவால் இருக்கும். பகை நாடாக இருந்தால், ஐநாவில் தான் பேசுவோம் என்று போவதில் பிரச்னை இல்லை. பக்கத்து மாநிலம் மட்டுமல்ல, இரண்டுமே இவர்கள் சொல்லும் திராவிட மாநிலம், கூட்டணி கட்சி, பிறகு ஏன் இந்த பிரச்னை தீரவில்லை?
2023ல் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் வரை ஏன் இந்த பிரச்னை வரவில்லை? போன ஆண்டு பயங்கர வெள்ளமா? அதற்கு முன் புயல் எதுவும் வந்ததா? பாஜக 5 ஆண்டு ஆட்சி செய்யும் போது, கர்நாடகா செழிப்பா இருந்ததா? அப்போ வறட்சி வரவில்லையா? பஞ்சம் வரவில்லையா? அப்போ எப்படி பங்கீடு சரியா வந்தது? இப்போ ஆட்சி மாறியதும், எப்படி பிரச்னை வந்தது?
மத்தியில் பாஜக, தமிழ்நாட்டில் அதிமுக, கர்நாடகாவில் பாஜக இருந்தவரை ஒரு சிக்கலும் வரவில்லை. தமிழ்நாடு அரசியல்வாதிகள், கர்நாடக அரசியல்வாதிகள், இருமாநில மக்கள் தான் இதை யோசிக்க வேண்டும். கர்நாடகா அழிச்சாட்டியம் செய்வது குழந்தைக்கு கூட தெரியும்.
தூண்டிவிடும் கர்நாடக காங்கிரஸ் அரசு
வாரியத்தில் கர்நாடக பிரதிநிதியும் இருக்கிறார். என்ன தண்ணி இருக்கு, எவ்வளவு பயிர் இருக்கு எல்லாத்தையும் பார்த்து தான் அவங்க தீர்ப்பு தருகிறார்கள். சித்தராமைய்யா ஏதேச்சிகாரத்தின் உச்சத்திற்கு போகிறார். பாகிஸ்தானை கூட இந்தியா இந்த அளவிற்கு நடத்தியது இல்லை. உணர்வுகளை தூண்டிவிடுகிறார்கள்.
கர்நாடகாவில் போராட்டம் நடத்துபவர்கள் சின்ன சின்ன அமைப்புகள். அரசாங்கள் சொன்னால் கேட்டுக்கொள்வாார்கள். எஸ்.பி., சொன்னாலே கேட்டுக் கொள்வார்கள். அவர்களை கட்டுப்படுத்த முடியாமலா இருப்பார்கள்? அரசு அமைதியாக வேடிக்கை பார்க்கிறது, தூண்டிவிடுவதாக தானே எடுக்க முடியும்.
நீங்க தண்ணி தரவில்லை என்றால், நாங்க மின்சாரம் தரமாட்டோம் என்று சீமான் சொல்கிறார். இறையாண்மை படி பார்த்தால் அது தவறாக இருக்கலாம். ஆனால், அவர்கள் செய்வதை பார்க்கும் போது, இப்படி பேசுவதை நியாயமாகத் தானே பார்க்க முடிகிறது.
திமுக பேச வேண்டியது தானே?
திமுக ஏன் இதை கேட்க மாட்டேங்குது? ‘நாங்க சட்டபோராட்டம் நடத்துறோம், உச்சநீதிமன்றத்திற்கு போறோம்’ என்கிறார்கள். உச்சநீதிமன்றம் போய் தானே இது வந்துள்ளது? அப்போ மக்கள் மன்றம் எதற்கு தான் இருக்கிறது? சட்டமன்றம் எதற்கு இருக்கிறது? நீங்க ஏன் பேசமாட்டேங்கிறீர்கள்? அவர்கள் உங்களுக்கு ஆகாத ஆட்களா?
பாஜக ஆட்சியில் இருந்தால் அரசியல் ரீதியா, நீங்க கேட்க முடியாது. உங்கள் நண்பர்கள் தானே அங்கே ஆட்சி பண்றாங்க, சோனியாவிடம் போன் பண்ணி கேட்கலாமே. ராகுலிடம் கேட்கலாமே. துரைமுருகன், சிவக்குமாரிடம் பேசினால் என்ன? தமிழக முதல்வர், சித்தராமையாவிடம் பேசினால் என்ன?
அங்கிருக்கும் தமிழர்களை எத்தனை காலத்திற்கு பதட்டமாக வைத்திருப்பீர்கள்? தமிழ்நாடு பதிவு எண் கொண்ட ஒரு வாகனம் உள்ளே நுழைய முடியவில்லை. போலீஸே அதை அனுமதிக்கவில்லை. எதிரி நாடு எனப்படும் பாகிஸ்தான், சீனாவிற்கு கூட போய் வருகிறோம். அண்டை மாநிலத்திற்கு போகமுடியவில்லை என்றால் எப்படி?
பாஜக எப்படி தந்தது?
கர்நாடக பாஜகவும் இதில் அரசியல் செய்கிறது. கட்சிகள் அரசியல் தான் செய்வார்கள். ஆனால், காங்கிரஸ் ஆட்சியை விட பாஜக அரசு எவ்வளவு சிறந்தது என்பதை ஒப்பிட வேண்டும். அண்ணாமலை கர்நாடக மேலிட பார்வையாளராரக இருந்த போது, தேர்தல் சமயத்தில் அவர்களின் தேர்தல் அறிக்கையில் மேகதாது அணியை கட்டுவேன் என்கிற காங்கிரஸ் கட்சியின்அறிக்கையை, பாஜக அறிக்கையில் வராமல் பார்த்துக் கொண்டார். இது தான், பெரிய விசயம்.
இந்த இடத்தில் ஆக்ரோஷமா இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது. கர்நாடகாவில் நடிகர்கள் போராடுகிறார்கள். இந்திய அணிக்கான வீரர் கே.எல்.ராகுல், கர்நாடகக்காரராக மாறிவிட்டார். காவிரி எங்களுடையது என்கிறார். அவருக்கு வரலாறு தெரியுமா? கர்நாடகாவின் பாதி பகுதி தமிழ்நாட்டில் இருந்தது அவருக்கு தெரியுமா?
இது தான் திராவிடமா?
ஆளாளுக்கு பிரச்னையை கிளறிவிடுகிறார்கள். அவர்கள் செய்வதற்காக நாமும் அப்படியே ரியாக்ட் பண்ண கூடாது. நேருக்கு நேராக பேச முடியவில்லை என்றால், எதற்கு திமுக-காங்கிரஸ் இடையே தோழமை இயக்கம்? போனில் கூட கேட்க முடியாதா? முயற்சியே எடுக்காமல் இருந்தால் எப்படி? மத்திய, மாநில கூட்டணியில் இருக்கும் உங்களால் என்ன முரண்பாடு?
திராவிடம் என்று சொல்லிவிட்டு, குடிக்க தண்ணீர் இல்லை, தரமாட்டேன் என்றால் என்ன திராவிடம்? நானும் நீயும் ஒன்னு என்று எப்படி சொல்ல முடியும்? தமிழ் தேசிய அரசியல் வந்தாலும், திராவிட அரசியல் வந்தாலும், தேசிய அரசியல் வந்தாலும் இதற்கு தீர்வு கிடைக்காது. தீர்வு ஒன்று தான், தோழமையில் இருப்பவர்கள் பேசி பெறவேண்டும்.
கர்நாடகாவில் பாஜக இருந்த போது, 5 ஆண்டு எப்படி தண்ணீர் வந்தது? என்று கேட்டால் அதற்கு பதிலே இல்லை. இங்கு அதிமுக அரசு இருந்த போது, பாஜக அரசு அங்கே இருந்த போது ஏன் பிரச்னை வரவில்லை? அதற்கு பதில் வேண்டும்.
ரஜினி பேச வேண்டிய அவசியம் என்ன?
இங்கு, ‘அவர் ஏன் பேசவில்லை, இவர் ஏன் பேசவில்லை’ என்று கேட்கிறார்கள். ஏன் கேட்க வேண்டும்? அவரவர் அவர் வேலையை தானே பார்க்க வேண்டும். சினிமாக்காரர்கள், விளையாட்டுக்காரங்க வரக்கூடாது. நமக்குத் தேவை தண்ணி, அவன் அறிக்கை கொடுத்தானா, இவன் ட்விட் போட்டானா என்று அதை காமெடியாக்க கூடாது.
ட்விட் போட்டா தண்ணீர் வந்திடுமா? அறிக்கை விட்டா தண்ணி வந்துடுமா? பதிலுக்கு பதிலா நாமும் பண்ண கூடாது. தமிழ்நாட்டில் ஒரு நடிகர் அறிக்கை கொடுத்து அழுத்தம் கொடுத்தால் தான் தமிழக அரசு வேலை பார்க்குமா? சூப்பர் ஸ்டார் ரஜினி அறிக்கை கொடுத்தால், ‘ஐயோ.. ரஜினி அறிக்கை கொடுத்துவிட்டார்’ என்று பதறிப்போய் சித்தராமைய்யா உடனே தண்ணி கொடுத்துவிடுவாரா?
உங்களுக்கு ஒரு காமெடி வேண்டும், ஒரு வீடியோ வேண்டும்? அதுக்கு இதை பேசுவீங்க. மத்திய அரசின் ஆணையம் தான் இது. அவங்க ஆணை பிறப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள். கர்நாடக அரசு கொடுக்கவே மாட்டேன் என்கிறது. ரஜினி அறிக்கை கொடுத்ததும், பிரதமர் பாய்ந்து போய், சித்தராமைய்யா கழுத்தை பிடிப்பாரா?
உணர்ச்சியை தூண்டியே அரசியல்
ஒருவர் தரவே மாட்டேன் என்று அடம்பிடிக்கிறார். அவரை கேட்கவே மாட்டேன், அவரை விடுங்க, ‘அவர் ஏன் சொல்லல? இவர் என் பேசல?’ என்று கேட்கலாமா? தமிழக அரசு கர்நாடக அரசை எப்போது இதற்காக அணுகியது? திமுக , காங்கிரஸ் அரசிடம் எப்போ பேசியது?
ஆட்சியை கலைப்பீங்களா என்று சித்தராமைய்யா பேசுகிறார். எதற்கு இந்த பேச்சு? சீண்டுவதற்கு, தூண்டுவதற்கான பேச்சு. உணர்வை தூண்டி தான் இங்கு அரசியல் செய்கிறார்கள். 6 பேர் வந்து சித்தார்த் செய்தியாளர் சந்திப்பை நிறுத்துகிறார்கள். 100 பேர் அங்கு அமர்ந்திருக்கிறார்கள். போலீஸ் அந்த 6 பேரை கட்டுப்படுத்த முடியாதா? அவர்களை கண்டிக்கிறீர்கள், கண்டிக்க வேண்டியது காங்கிரஸ் அரசை. எவ்வளவு பெரிய பதட்டத்தை உருவாக்குறாங்க!,’’
என்று அந்த பேட்டியில் ரங்கராஜ் பாண்டே பேசியுள்ளார்.