தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Bsp Armstrong Murder: ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம்..பேரிடியாக வந்த நீதிபதி முடிவு..நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

BSP Armstrong Murder: ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம்..பேரிடியாக வந்த நீதிபதி முடிவு..நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

Karthikeyan S HT Tamil

Jul 07, 2024, 11:15 AM IST

google News
BSP Armstrong Murder: கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை மயானம் என அறிவிக்கப்பட்ட இடத்தில் தான் உடல் அடக்கம் செய்ய முடியும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
BSP Armstrong Murder: கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை மயானம் என அறிவிக்கப்பட்ட இடத்தில் தான் உடல் அடக்கம் செய்ய முடியும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

BSP Armstrong Murder: கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை மயானம் என அறிவிக்கப்பட்ட இடத்தில் தான் உடல் அடக்கம் செய்ய முடியும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை அவரது வீட்டின் அருகே வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவத்திற்கு பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உள்பட பல கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த படுகொலை தொடர்பாக செம்பியம் போலீசார் வழக்குப் பதிவு செய்து இதுவரை 11 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மாநகராட்சி ஆணையரிடம் மனு

கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி மாநில அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி தரப்பில் சென்னை மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு தொடர்பாக மாநகராட்சி ஆணையர் எந்த பதிலும் அளிக்கவில்லை. 

நீதிமன்றத்தில் முறையீடு

இதனைத்தொடர்ந்து, இந்த கோரிக்கை தொடர்பாக அவசரமாக விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பொற்கொடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்டது. அதன்படி, இந்த மனுவை தனி நீதிபதி ஒருவர் விசாரிக்க பொறுப்பு தலைமை நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி இன்று காலை இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்புராயன் முன்பு விசாரணைக்கு வந்தது.

நீதிபதி பவானி சுப்புராயன் அறிவுறுத்தல்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பவானி சுப்பராயன், குடியிருப்புப் பகுதியில் மணிமண்டபம் கட்ட எப்படி அனுமதிக்க முடியும்?, ஆம்ஸ்ட்ராங் மரணம் பெரிய இழப்பாக இருந்தாலும் சட்ட விதிகளை மீற முடியாது. விஜயகாந்த் நினைவிடம் பெரிய அளவில் உள்ளது. அதனுடன் ஒப்பிட முடியாது. ஆம்ஸ்ட்ராங் உடலை மயானம் என அறிவிக்கப்பட்ட இடத்தில் தான் உடல் அடக்கம் செய்ய முடியும். தற்போதைக்கு அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்துவிட்டு , வேறு இடத்தில் மணிமண்டபம் கட்டிக் கொள்ளலாம். தற்போதைக்கு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.

எந்த சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படக்கூடாது. நாளை வீர வணக்கம் போன்ற நிகழ்வின் போது ஆயிரக்கணக்கான மக்கள் வந்தால் என்ன செய்வது. ஹத்ராஸ் சம்பவத்தை பார்த்தீர்களா? வேறு பெரிய சாலை, விசாலமான இடம் இருந்தால் சொல்லுங்கள், அதன்பிறகு உத்தரவு பிறப்பிக்கிறேன்" என்று நீதிபதி பவானி சுப்புராயன் தெரிவித்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: "பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது. கொலையில் சம்பந்தப்பட்டவர்களை காவல்துறை இரவோடு இரவாகக் கைது செய்திருக்கிறது.

ஆம்ஸ்ட்ராங்கை இழந்து வாடும் அவரது கட்சியினர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்து கொள்வதோடு, வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரக் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்."  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி