Tamil Live News Updates : புத்தாண்டு கொண்டாட்டம் - வழிகாட்டு நெறிமுறைகளை சொன்ன காவல் துறை!
Dec 30, 2023, 05:57 PM IST
Tamil Live News Updates: இன்றைய (30.12.2023) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.
புத்தாண்டு கொண்டாட்டம் - வழிகாட்டு நெறிமுறைகள்
சென்னை மெரினாவில் இரவு 8 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு 1 மணிக்குள் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் தெற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா, வடக்கு கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க் பேட்டியளித்துள்ளார்.
தென்மாவட்டங்களில் கனமழை அலெர்ட் - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அமைச்சர் வலியுறுத்தல்
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால் திருநெல்வேலி, குமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மீண்டும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை ஆய்வுமையம் கூறிய நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
விஜயகாந்திற்கு மணிமண்டம் அமைக்க அரசுக்கு கோரிக்கை வைத்த பிரேமலதா விஜயகாந்த்!
விஜயகாந்திற்கு மணிமண்டபம் அமைக்க அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறோம் என்றும்; அதை அரசு செய்வார்கள் என்று நம்புவதாகவும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
"என் பையன் நடிச்ச படம் வானம்.. இது எங்களால முடிஞ்ச சிறு தானம்": டி.ராஜேந்தர் பேட்டி
மழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதற்காக தூத்துக்குடி சென்ற நடிகர் டி.ராஜேந்தர் அளித்தபேட்டியில், முன்புதான் நான் டி.ஆர் என்றும் தற்போது தான் இறை அடியார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், என் பையன் நடித்த படம் வானம் என்றும்; இது எங்களால் முடிந்த சிறு தானம் என்றும் டி.ராஜேந்தர் பேட்டியளித்துள்ளார்.
ரூ.1000 கோடி மதிப்பிலான நிவாரணத்தொகுப்புகள் வழங்க முதலமைச்சர் உத்தரவு!
பெருமழை மற்றும் பெருவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்கு வீட்டு வசதி, தொழிற்கடன் உள்ளிட்ட ரூ.1000 கோடி மதிப்பிலான நிவாரண தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களில் தகுதி வாய்ந்த 4 ஆயிரம் சுய உதவிக் குழுக்களுக்கு, ரூ.350 கோடி அளவில் புதிய கடன் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்களில் மழையால் சேதமடைந்த வீடுகளை பழுது பார்க்கவும், முழுவதுமாக கட்டித்தரவும் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
மேலும், வீடுகளைப் புதிதாக கட்ட ரூ.4 லட்சமும், சேதமடைந்த வீடுகளை சீர்செய்ய ரூ.2 லட்சம் வரை வழங்கிடவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களில் சுமார் 2.64 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. இதற்கு நிவாரணமாக ரூ.250 கோடி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நிவாரணத்தை வழங்கி வரும் நடிகர் விஜய்!
நெல்லையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் விஜய் நிவாரணப் பொருட்களைக் கொடுத்து வருகிறார்.
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து எப்போது பேருந்து சேவைகள் தொடங்குகின்றன?
புதிதாகத் திறக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு, நாளை (டிச.31) முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து மாநகரப் பேருந்து சேவைகள் தொடங்குகிறது.
தூத்துக்குடி வந்தடைந்தார் நடிகர் விஜய்!
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க தூத்துக்குடி வந்தடைந்தார் நடிகர் விஜய்.
மேட்டூர் அணையிலிருந்து 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும்- ராமதாஸ்!
காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
மயிலாடுதுறை, நெல்லை மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மக்களை இன்று நேரில் சந்திக்கிறார் நடிகர் விஜய்!
Actor Vijay : தூத்துகுடி, நெல்லையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இன்று நேரில் சந்திக்கிறார் நடிகர் விஜய்.
வலிமையான கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வோம் -ஈபிஎஸ்!
எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி முசிறியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் அதிமுக தலைமையில் வலிமையான கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வோம். அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்றார்.
கிளாம்பாக்கம் பேருந்துநிலையம் இன்று திறப்பு!
CM Stalin : சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
Gold Rate: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிச.30) மாற்றம் இல்லாமல் ஒரு சவரன் ரூ.47,280-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் ரூ.5910-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்
Silver Rate: சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை இன்று (டிச.30) 30 காசுகள் உயர்ந்து ரூ. 80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.80,000-க்கு விற்பனையாகிறது.
பாலத்திற்கு அடியில் வசமாக சிக்கிய ஏர் இந்தியா விமானம்!
மும்பையில் இருந்து அசாமிற்கு, பழைய ஏர் இந்தியா விமானத்தை லாரியில் வைத்து கொண்டு சென்றபோது எதிர்பாராத விதமாக பாலத்திற்கு அடியில் விமானம் சிக்கிக்கொண்டதால் பரபரப்பு. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் லாரி மீட்கப்பட்டது.
அடுத்த 3 மணிநேரத்தில் 9 மாவட்டங்களில் மழை வாய்ப்பு!
Rain Update: அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடலூர், மயிலாடுதுறை, நாகை , ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தேனி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
6 வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடக்கம்!
Modi: 6 வந்தே பாரத் ரயில் சேவையை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.
கோவை - பெங்களூர் இடையேயேயான வந்தே பாரத் ரயில் சேவையும் இன்று தொடக்கம்.
2 அம்ரித் பாரத் ரயில் சேவைகளையும் பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார்.
நெல்லை மாணவர்களுக்கு ரெடியாகுங்க.. தேர்வு தேதி அறிவிப்பு
Exam: நெல்லை மாவட்டத்தில் கன மழை காரணமாக வெள்ளத்தால் ஒத்தி வைக்கப்பட்டிருந்த அரையாண்டு தேர்வு நடைபெறு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆறு முதல் பத்தாம் வகுப்புகளுக்கு ஜனவரி 4 முதல் 10ஆம் தேதி வரையும், 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு ஜனவரி 4 முதல் 11ஆம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெறும் என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் இன்று திறப்பு!
Bus stand: சென்னை கிளாம்பக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் இன்று திறக்கப்படுகிறது. பிரம்மாண்டமான பேருந்து நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
சபரி மலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு
Sabarimalai: மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.
முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்
Water Level: புழல் ஏரியில் நீர்இருப்பு 2970 மில்லியன் கன அடியாக உள்ளது. இதில் நீர்வரத்து 46 கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீர் வெளியேற்ற படுகிறது.
சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 777 மில்லியன் கன அடியாக உள்ளது. சோழவரம் ஏரிக்கு 16 கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.
கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர் இருப்பு முழு கொள்ளவை எட்டி 27வது நாளாக உபரிநீர் வழிந்தோடுகிறது. நீர்வரத்து 10 கனஅடியாக உள்ளது.
புதுக்கோட்டை சாலை விபத்தில் 5 பேர் பலி
Accident: புதுக்கோட்டை மாவட்டம் நமண சமுத்திரம் அருகே வேர், கார் மீது லாரி மோதியது இந்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர் மேலும் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்
பெட்ரோல் விலை நிலவரம்!
Petrol Diesel Price: சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 588 ஆவது நாளாக மாற்றமில்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் இன்று (டிச.30) பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
டாபிக்ஸ்