Tamil Live News Updates : தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கியது!
Nov 18, 2023, 07:50 PM IST
Tamil Live News Updates: இன்றைய (18.11.2023) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தில் இணைந்திருங்கள்.
நயன்தாராவின் டெஸ்ட் பட போஸ்டர் வெளியீடு
HBD Nayantara: நடிகை நயன்தாரா பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்த ‘டெஸ்ட்’ என்ற படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
நயினார் நாகேந்திரனுக்கு அமைச்சர் பொன்முடி பதில்!
TN Assembly : ஒரு மத்திய பல்கலைக்கழகத்தின் வேந்தராக பிரதமர் மோடி இருக்கிறார். அதுக்கு வழிவகுக்கும் சட்டம், இதுக்கு வழிவகுக்காதா?" என நயினார் நாகேந்திரனுக்கு அமைச்சர் பொன்முடி பதிலளித்துள்ளார்.
பாஜக எம்.எல்.ஏ. கோரிக்கையை ஏற்று வார்த்தையை மாற்றிக்கொண்ட சிபிஐ எம்.எல்.ஏ!
TN Assembly : ஆளுநர் ரவி சிறுபிள்ளைத் தனமாக செயல்பட்டு வருகிறார் என சிபிஐ எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் பேசியதற்கு, பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் எதிர்ப்பு தெரிவித்தார். சிறுபிள்ளை என்பது குழந்தைத்தனத்தை குறிப்பிடுவதுதான். அதில் அநாகரீகம் எதுவும் இல்லை என அமைச்சர் துரை முருகன் பதிலளித்தார். நெல்லை பகுதியில் வேறு விதமாக புரிந்துகொள்ளப்படும் என நயினார் நாகேந்திரன் கூறியதால் அந்த வார்த்தையை ராமச்சந்திரன் திரும்பப் பெற்று, குழந்தைத்தனமாக என மாற்றிக்கொண்டார்
ஆளுநர் விழாக்களுக்கு சென்று விதண்டாவாதம் பேசுகிறார் -மு.க.ஸ்டாலின் உரை
TN Assembly : ஆளுநர் யாரையாவது அழைத்து வகுப்பெடுக்கிறார் அல்லது விழாக்களுக்கு சென்று விதண்டாவாதம் பேசுகிறார் என ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் குறித்து சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை.
ஒரு புள்ளி கூட மாறாமல் சட்ட மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றம் - சபாநாயகர் அப்பாவு!
TNAssembly : ஒரு புள்ளி கூட மாறாமல் இந்த சட்ட மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்படும் - மு.க.ஸ்டாலின்!
TNAssembly : ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததும் அவசர அவசரமாக இந்த சட்ட மசோதாக்களுக்கு எவ்வித ஒப்புதலும் வழங்காமல் திருப்பி அனுப்பியுள்ளார். இந்த 10 சட்ட மசோதாக்களும் மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
என் உடல் நலனை விட மக்கள் நலனே முக்கியம் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Cm Stalin : என் உடல் நலனை விட மக்கள் நலனே முக்கியம்; தாய் தமிழ்நாட்டின் நலனே முக்கியம். இந்திய ஜனநாயகம் மிக மோசமான நிலையில் உள்ளது. மக்களாட்சி தத்துவத்தின்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பது ஆளுநரின் பொறுப்பு. விளக்கம், சந்தேகம் இருந்தால் அரசிடம் கேட்கலாம். ஒருபோதும் அவர் கோரிய விளக்கங்கள் கொடுக்கப்படாமல் இருந்ததில்லை என பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
ஆளுநர் தமிழ்நாட்டையும், மக்களையும் அவமதித்துள்ளார் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Cm Stalin : மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மை அரசின் மசோதாக்களை ஆளுநர் நிறைவேற்றி தர வேண்டும் என்பது ஆளுநரின் கடமை. தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில் மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். தமிழ்நாட்டையும், மக்களையும் அவமதித்துள்ளார் என சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சங்கரையா, பங்காரு அடிகளார் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்!
TNAssembly : தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கியது. மறைந்த சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் CPIM மூத்த தலைவர் சங்கரையா, பங்காரு அடிகளார் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கியது!
TNAssembly : ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற இன்று சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நடைபெறுகிறது.
அண்ணா பல்கலை தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு!
அண்ணா பல்லைகழக தேர்வு கண்டனம் உயர்த்தப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (நவம்பர் 18) செய்தியாளர்களை சந்தித்த அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், “உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உத்தரவின் பேரில் தேர்வு கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. அடுத்த செமஸ்டரில் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிப்பதை அமல்படுத்த அமைச்சர் அறிவுறுத்தினார். நடப்பாண்டு மாணவர்கள் பழைய தேர்வு கட்டணத்தை செலுத்தலாம். கூடுதலாக வசூலிக்கப்பட்ட பணம் மாணவர்களிடம் திருப்பி அளிக்கப்படும். அமைச்சர் உத்தரவு தொடர்பாக சிண்டிகேட் உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெறப்படும். பொதுவாக கட்டணத்தை 100% உயர்த்தியிருக்க வேண்டும். ஆனால் 9 ஆண்டுகளுக்குப் பின் 50% மட்டுமே உயர்த்தியுள்ளோம்’ என வேல்ராஜ் தெரிவித்தார்.
வ.உ. சி வைராக்கியத்தைக் கைக்கொள்ள உறுதியேற்போம்- கமல்ஹாசன்
“ஆங்கில அதிகாரத்தை எதிர்த்துக் கொள்கை வீரத்தையும் செயல் தீரத்தையும் காட்டிய அதிதீரர் வ.உ. சிதம்பரனாரின் நினைவு நாளில் அவரது வைராக்கியத்தைக் கைக்கொள்ள உறுதியேற்போம்.” என நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல் ஹாசன் தனது ட்விட்டர் பதில் குறிப்பிட்டுள்ளது.
போதை பொருள் பறிமுதல்!
சென்னை பல்லாவரம் பகுதியில் ரகசிய தகவலின் அடிப்படையில் ரூ.2 கோடி மதிப்புள்ள 5 கிலோ மெத்தம்பெட்டமையின் வகை போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் சூரிய மூர்த்தி என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமாரபாளையம் அருகே காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே அருவங்காடு பகுதியில் புலம்பெயர் தொழிலாளர்களான காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். நூற்பாலையில் பணியாற்றும் ஒடிசாவைச் சேர்ந்த டிம்பு மஜ்கி, பீகாரைச் சேர்ந்த கோமல் குமாரி இருவரும் காதலித்து வந்த நிலையில் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்க மறுத்துள்ளதாக தெரியவந்துள்ளது
தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் இன்று!
தமிழகத்தின் பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளின் இடையே இன்று தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது. ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லாமல் 546ஆவது நாளாக அதே விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை இன்று (நவ.18) லிட்டருக்கு ரூ.102.63-க்கும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
டாபிக்ஸ்