Karumuthu: 'தமிழை காக்க காந்தியை எதிர்த்தவர்!' கருமுத்து தியாகராஜ செட்டியார் பிறந்தநாள் இன்று…!
Jun 16, 2023, 06:40 AM IST
”மொழிப்புரட்சியில் சிக்கியவர்கள், சீரழிந்தவர்களை காப்பாற்ற முன்வந்த தமிழ் ஆர்வலர்களில் ஒருவர் கருமுத்து அவர்கள். தமிழை வளர்த்தவர், தமிழுக்கு தீங்கு என்று சொன்னால் துடித்தவர்” - கருமுத்து தியாகராஜர் குறித்து கலைஞர் பேசியது…!
”01.02.1946 அன்று நீங்கள் மதுரையில் இருந்தபோது ’ராஷ்டிரபாஷா’ என்பதற்குரிய விளக்கத்தை அளிக்குமாறு கோரி இருந்தேன். ஆனால் இதுவரை அந்த விளக்கத்தை நேரடியாகவோ அல்லது ’ஹரிஜன்’ பத்திரிக்கை மூலமாகவோ மறைமுகமாகவும் கூட தெரிவிக்கவில்லை.
இதற்கு உங்களால் பதிலளிக்க முடியாது என்று எனது அறிவார்ந்த நண்பரும், புகழ்பெற்ற சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான டாக்டர் லட்சுமணசாமி முதலியார் கூறுகிறார்.
‘இந்துஸ்தானி’யை இந்தியாவின் பொதுமொழியாக, மைய அரசின் நீதிமன்றமொழியாக ஆக்க விரும்பினால் அது குறித்து எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி மொழியாகவோ, நீதிமன்ற மொழியாகவோ இந்துஸ்தானியை திணிக்க முயன்றால் வளம்மிக்க பாரம்பரியத்தை கொண்டுள்ள எங்கள் தாய் மொழியை இந்துஸ்தானிக்காக பலிகொடுக்க விரும்பாமல் ஒவ்வொருவரும் ரத்தம் சிந்த முன்வரும் நிலை உருவாகும்.”
மேற்கண்ட வார்த்தைகள் தமிழ்நாட்டில் மிகப்பெரும் செல்வந்தர், கல்வியாளர், பத்திரிகை ஆசிரியராக அறியப்பட்ட கருமுத்து தியாகராஜ செட்டியார் மகாத்மா காந்திக்கு எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி.
தனது தாய் மொழியான தமிழுக்கு ஆபத்து நேருமாயின் தான் இருக்கும் காங்கிரஸ் கட்சியை மட்டுமல்ல காந்தியையே எதிர்க்க துணிந்தவர் கருமுத்து தியாகராஜ செட்டியார் என்பதை இந்த கடிதம் உணர்த்துகிறது.
பிறப்பும் படிப்பும்
1893ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் முத்துக்கருப்பன் செட்டியாருக்கு பத்தாவது மகனாக பிறந்த கருமுத்து தியாராஜ செட்டியார் இலங்கையில் உள்ள கொழும்பு புனித தோமையல் கல்லூரியில் கல்வி பயின்றார். அங்குள்ள மலையக தோட்டத்தொழிலாளர்கள் நலனை வலியுறுத்தி பத்திரிக்கை ஒன்றையும் நடத்தினார். மலையக தமிழர்களுக்கு உடலில் அடையாள சூடு போடும் பழக்கத்தை எதிர்த்தும் தியாகராஜ செட்டியார் போராடினார்.
தமிழ்ப்பற்றாளர்
1925ஆம் ஆண்டு மதுரையில் மீனாட்சி மில் என்ற பெயரில் நூல் மற்றும் நெசவு ஆலையை அமைத்த அவர். தமிழ் மீது கொண்ட பற்று காரணமாக தனித்தமிழில் வெளியாகும் தமிழ்நாடு என்ற பத்திரிக்கையை நடத்தினார். இலங்கையில் ஆங்கில நாளிதழில் பணியாற்றிய அனுபவம் இருந்தாலும் ஆங்கில சொற்கள் கலவாமல் தமிழில் பேசுவதையும் எழுதுவதையும் வழக்கமாக கொண்டார்.
தமிழறிஞர்கள் சிற்கைலாசம்பிள்ளை, பண்டிதமணி, நாவலர் சோமசுந்தர பாரதியார், வரத நஞ்சய பிள்ளை, முனைவர் இலக்குவனார், திருவாசகமணி பாலசுப்பிரமணியம், ஔவை துரைசாமி பிள்ளை, கி.ஆ.பெ.விஸ்வநாதம், மாபொசி உள்ளிட்டோருடன் நட்பு பாராட்டியது மட்டுமின்றி அவர்களது படைப்புகளுக்கும் ஆதரவு நல்கினார்.
காங்கிரஸும் காந்தியும்
1917ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு விடுதலைக்காக போராடிய செட்டியாரின் வீட்டில் தான் மதுரை வந்திருந்த மகாத்மா காந்தி தங்கினார்.
காங்கிரஸ் அனுதாபியாக இருந்த நிலையில் 1965ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் மாணவர்கள் பின்னணியில் இருந்து வெற்றி பெற காரணமாக இருந்தவர்களில் கருமுத்து தியாகராஜருக்கு முக்கிய இடம் உண்டு.
”தமிழுக்கு தீங்கு என்றால் துடித்தவர்”
மொழிப்போரில் அவரது பங்களிப்பு குறித்து பேசிய முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி ”அன்றைக்கு நடந்த மாணவர் போராட்ட மொழிப்புரட்சியில் சிக்கியவர்கள், சீரழிந்தவர்களை காப்பாற்ற முன்வந்த தமிழ் ஆர்வலர்களில் ஒருவர் கருமுத்து அவர்கள். தமிழை வளர்த்தவர், தமிழுக்கு தீங்கு என்று சொன்னால் துடித்தவர்” என குறிப்பிட்டுள்ளார்.
14 ஜவுளி ஆலைகள், 19 கல்வி நிலையங்கள், மதுரை வங்கி, மதுரை காப்பீட்டு நிறுவனம் ஆகிய தொழில்களை நிறுவி நடத்திய கலைத்தந்தை கருமுத்து தியாகராஜ செட்டியார் தனது 81ஆம் அகவையில் 1974ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் தேதி மறைந்தார்.