HBD VK Sasikala: ஜெயலலிதாவின் தோழி சின்னம்மா ஆன கதை! வி.கே.சசிகலாவின் பிறந்தநாள் இன்று!
Aug 18, 2023, 06:20 AM IST
”பொதுத்தேர்தல்களின் போது அதிமுக வேட்பாளர் தேர்வில் சசிகலாவின் செல்வாக்கு எத்தகையது என்பது அதிமுகவினர் அனைவரும் அறிந்த விஷயம்”
சமூகத்தில் அழியாத முத்திரையை பதிக்கும் நட்பு, தோழமை மற்றும் வாழ்க்கையின் பின்னிப்பிணைப்பு போன்றவை வாழ்கையை மாற்றும் தனிப்பெரும் சக்தியாக வரலாற்றில் மாறி உள்ளன. அத்தகைய வரலாறுகளில் ஒன்றுதான் சசிகலா நடராஜன் என்ற பெண்ணின் வாழ்க்கை.
ஆரம்பகால வாழ்க்கை
இன்றைய திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டியில் விவேகானந்தன், கிருஷ்ணவேணி தம்பதிக்கு 1954ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி பிறந்தவர் சசிகலா. பின்னர் குடும்ப சூழல் காரணமாக இவர்களின் குடும்பம் மன்னார்குடிக்கு இடம்பெயர்ந்தது.
கல்லூரி காலத்தில் மொழிப்போராட்டத்தில் ஈடுபட்டு பின்னர் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையில் ஊழியராக இணைந்த நடராஜனுக்கும் சசிககாவுக்கும் 1973ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி தலைமையில் திருமணம் நடைபெற்றது.
வினோத் வீடியோ விஷன்
1984ஆம் ஆண்டு ஆழ்வார்பேட்டையில் உள்ள பீமண்ண தோட்டத் தெருவில் வினோத் வீடியோ விஷன் என்ற பெயரில் வீடியோ கடை ஒன்றை சசிகலா நடத்தி வந்தார். கடலூர் மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த ம.நடராசன் இருந்தபோது அம்மாவட்ட ஆட்சியராக இருந்தவர் சந்திரலேகா ஐ.ஏ.எஸ்.
அப்போது கடலூரில் நடைபெற்ற ஜெயலலிதாவின் கூட்ட நிகழ்ச்சியை வீடியோ பதிவு செய்யும் ஆர்டர் சந்திரலேகாவின் பரிந்துரையின் பேரில் வினோத் வீடியோ விஷன் நிறுவனத்திற்கு கிடைத்தது.
ஜெயலலிதாவுடன் நட்பு
இந்த சம்பவம்தான் சசிகலாவுக்கு ஜெயலலிதாவின் அறிமுகத்தை பெற்றுத் தந்தது. மெல்ல மெல்ல ஜெயலலிதாவின் முழுமையான நம்பிக்கை பெற்ற நபராக சசிகலா மாறினார். ஜெயலலிதா மாநிலங்களவை உறுப்பினராக இருந்த காலத்தில் அவரோடு டெல்லி செல்லும் அளவுக்கு அவருடைய நம்பிக்கை வளர்ந்தது.
எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் அவரது உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டபோது ஜெயலலிதா அவரது தலைமாட்டில் நின்று கொண்டிருந்தார். அவரை சுற்றி வளைத்து பாதுகாத்தது குடும்பம்தான் என பிற்காலத்தில் அளித்த பேட்டியில் நடராஜன் தெரிவித்தார்.
முதலமைச்சருக்கு எல்லாமும்
1988ஆம் ஆண்டில் இருந்து ஜெயலலிதாவின் போயர் தோட்டத்திலேயே நிரந்தரமாக தங்கத் தொடங்கிய சசிகலா 1991ஆம் ஆண்டு முதலமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்றபோது அவருக்கு எல்லாமுமாக மாறினார்.
ஜெயலலிதாவை அம்மா என்றும் சசிகலாவை சின்னம்மா என்றும் அதிமுகவினர் அழைக்கத் தொடங்கினர். ஆட்சிக்கட்டிலில் இருக்கும் போது கோட்டை தொடங்கி ஆட்சியை இழந்த பின்னர் சிறைக்கட்டிலுக்கு செல்லும் வரை ஜெயலலிதாவின் நிகழலாக பின் தொடர்ந்தார் சசிகலா.
பிரிவும் சேர்க்கையும்
1996 ஆம் ஆண்டு ஆட்சி போன பிறகு சிறிது காலம் சசிகலாவை ஒதுக்கி வைத்திருந்தாலும் இந்த பிரிவு வெகுகாலம் நீடிக்கவில்லை. வெகுவிரைவிலேயே மீண்டும் போயஸ் இல்லத்தில் ஐக்கியமானர் சசிகலா.
இதன் பின் 2011ஆம் ஆண்டு வரை கட்சியிலும் ஆட்சியிலும் சசிகலா இல்லாமல் அணுவும் அசையாது என்ற நிலை உருவானது. 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் தேதி சசிகலா உட்பட அவரது குடும்பத்தினர் அனைவரையும் கட்சியில் இருந்து நீக்கினார்.
போயஸ் கார்டனில் இருந்து சசிகலா வெளியேற்றப்பட்டார். இருப்பினும் இந்த பிரிவு வெகுகாலம் நீடிக்கவில்லை 2012ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி சசிகலா எழுதியதாக அறிக்கை ஒன்று ஊடகங்களில் வெளியானது. அதில் கட்சி தொடர்பாகவோ, மக்கள் பிரதிநிதி ஆவது தொடர்பாகவோ எனக்கு எந்த விருப்பமும் இல்லை; அக்காவுக்கு உண்மையான தங்கையாக இருக்கவே விரும்புவதாக சசிகலா கூறி இருந்தார்.
மன்னிப்பை ஏற்றுக் கொண்ட ஜெயலலிதா மார்ச் 31ஆம் தேதி சசிகலாவை மட்டும் கட்சியில் இணைத்துக் கொண்டார். இந்த நட்பு 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி அன்று ஜெயலலிதா மரணம் அடையும் வரை நீடித்தது. 2014ஆம் ஆண்டு சொத்துக் குவிப்பு வழக்கில் இருவரும் ஒன்றாகவே சிறைக்கு சென்றனர்.
சசிகலாவின் செல்வாக்கு
பொதுத்தேர்தல்களின் போது அதிமுக வேட்பாளர் தேர்வில் சசிகலாவின் செல்வாக்கு எத்தகையது என்பது அதிமுகவினர் அனைவரும் அறிந்த விஷயம்.
2002ஆம் ஆண்டில் ஜெயலலிதாவல் முதல்வர் பதவி வகிக்க முடியாத போது ஓ.பன்னீர் செல்வத்தை தேர்வு செய்யும் முடிவை ஜெயலலிதா எடுத்ததற்கு முக்கிய காரணம் சசிகலாதான் என்பது வரலாறு.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த காலத்தில் அவரையும் அவரது குடும்பத்தினரையும் தவிர யாராலும் அவரை சந்திக்க முடியாத நிலை இருந்ததாக இன்றளவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. ஜெயலலிதா மறைந்த நிலையில் சசிகலாவின் பரிந்துரையின் பெயரிலே நள்ளிரவில் ஓ.பன்னீர் செல்வம் முதலமைச்சராக பதவியேற்றார்.
2016ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியில் பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி முதலமைச்சர் பதவியை ஓ.பன்னீர் செல்வம் ராஜினாமா செய்தார். பிறகு அப்போதைய ஆளுநர் வித்யாசாகர்ராவை சந்தித்த சசிகலா ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
சிறை தண்டனை
ஆளுநர் எந்த முடிவையும் தெரிவிக்காத நிலையில் பிப்ரவரியில் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்யவே சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர் சிறைக்கு சென்றனர்.
எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். இந்த நிலையில் கட்சியில் ஏற்பட்ட பிரச்னையில் சசிகலாவின் குடும்பத்தினரை கட்சியில் இருந்து ஒதுக்குவதாக ஈபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அறிவித்தனர். இதனையெடுத்து டிடிவி தினகரன் அமமுக என்ற தனிக் கட்சியைத் தொடங்கினார்.
மீண்டும் அரசியல் பணி
சிறை தண்டனைக்கு பிறகு 2021ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி வெளியே வந்த சசிகலாவுக்கு பிப்ரவரி 8ஆம் தேதி பெங்களூருவீல் உள்ள தேவனஹள்ளியில் இருந்து அவரது இல்லம் வரை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் 2021ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்தார்.
2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்து திமுக ஆட்சி அமைத்த நிலையில் அனைவரையும் ஒருங்கிணைத்து மீண்டும் தமிழகத்தில் அம்மா ஆட்சியை உருவாக்குவேன் என கூறி அரசியல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
டாபிக்ஸ்