Tiruvanamalai Karthigai Deepam : திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட பரணி தீபம்!
Dec 06, 2022, 09:18 AM IST
திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு கோயிலில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் 10 நாள்கள் நடைபெறும் கார்த்திகை தீப திருவிழாவுக்கான கொடியேற்றம் கடந்த 27ஆம் தேதி நடைபெற்றது. அதிகாலை, 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அருணாச்சலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
இந்நிலையில், இந்த விழாவில் முக்கிய நிகழ்வான பரணி தீபம் இன்று ஏற்றப்பட்டது. இதை அடுத்து மகா தீபம் இன்று மாலை ஏற்றப்படுகிறது . இன்று அதிகாலை அண்ணாமலை கோயில் வளாகத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது.
இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் இன்று மாலை ஏற்றப்படுகிறது. மகா தீபத்திற்கு பயன்படுத்தப்படும் தீப கொப்பரைக்கு நேற்று முன்தினம் சிறப்பு பூஜை செய்யப்பட்டு மலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இன்று மாலை ஆறு மணிக்கு 2, 668 அடி உயரமுள்ள கோயில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. 40 லட்சம் வரையிலான பக்தர்கள் இந்த மகா தீபம் விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
இந்த நிகழ்வைத் தொடர்ந்து, டிசம்பர் 7ஆம் தேதி அதாவது நாளை ஸ்ரீசந்திரசேகரர் தெப்பல் உற்சவம், டிசம்பர் 8ஆம் தேதி ஸ்ரீபராசக்தி அம்மன் தெப்பல் உற்சவம், டிசம்பர் 9ஆம் தேதி ஸ்ரீசுப்பிரமணியர் தெப்பல் உற்சவம் நடைபெறுகிறது.
டாபிக்ஸ்