Rain: ’ஜனவரியிலும் மழை வெளுப்பது ஏன்?’ வானிலை ஆய்வாளர் விளக்கம்!
Jan 08, 2024, 01:28 PM IST
”இது எல்நீனோ ஆண்டாக உள்ளது. வட இந்திய கடல் வெப்பமாக உள்ளது. இதனால் மீண்டும் மேகம் உருவாவதற்கான நிலை உள்ளது. இதனை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்”
வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வட தமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் மேலும் ஒரு கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. 5 இடங்களில் அதிகனமழை, 17 இடங்களில் மிக கனமழை, 55 இடங்களில் கனமழையும் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக சீர்காழியில் 23 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், நாளை ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த 24 மணி நேரத்திற்கு திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிக கனமழையும் பெய்யும்.
தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை, தஞ்சை, கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம்,திருவள்ளூர், சென்னை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் சில பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும்.
வடகிழக்கு பருவமழை தொடர்ந்து நீடித்து வருகிறது. அடுத்த 4 முதல் 5 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக வடகிழக்கு பருவமழையானது ஜனவரி மாதம் வரை நீடிக்கிறது.
இது எல்நீனோ ஆண்டாக உள்ளது. வட இந்திய கடல் வெப்பமாக உள்ளது. இதனால் மீண்டும் மேகம் உருவாவதற்கான நிலை உள்ளது. இதனை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.