Asra Garg IPS: வடசென்னைக்கு வரும் அஸ்(ச)ரா(த) கார்க்! ரவுடி ராஜ்ஜியத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பாரா?
Aug 07, 2023, 03:37 PM IST
“தென்மண்டல ஐஜி பொறுப்பை வகித்து வந்த அஸ்ரா கார், சென்னை கூடுதல் காவல் ஆணையராக (வடக்கு) நியமனம் செய்யப்பட்டுள்ளார்”
தமிழ்நாட்டில் 27 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் தென்மண்டல ஐஜி பொறுப்பை வகித்து வந்த அஸ்ரா கார், சென்னை கூடுதல் காவல் ஆணையராக (வடக்கு) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவை பூர்வீகமாக கொண்ட அஸ்ரா கார்க் அடிப்படையில் ஒரு எலக்ட்ரிக்கல் எஞ்சினியர். 2004ஆம் ஆண்டில் தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் ஆனார்.
அன்றைய ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உதவி காவல் ஆணையராக தனது காவல்துறை வாழ்கையை தொடங்கிய அஸ்ரா கார்க்
2008ஆம் ஆண்டு முதல் 2010 ஆண்டு வரை சர்ச்சைகள் நிறைந்த திருநெல்வேலி மாவட்டத்தின் ஊரக பகுதிகளின் எஸ்.பியாக பணியாற்றிய போது அங்கு கோலோச்சிய கந்துவட்டி கலாச்சாரத்தை ஒழிக்க கடும் நடவடிக்கைகளை எடுத்தார். கந்துவட்டி காரர்களையும் அதிக வட்டிக்கு பணம் கொடுத்து கடனை வசூலிக்க ரவுடிகளை வைத்து மிரட்டுபவர்களையும் பிடிக்க சிறப்பு காவல் படையை உருவாக்கினார்.
2010ஆம் ஆண்டில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற கார்க் உத்தமபுரத்தில் தலித் மக்கள் நுழைவதற்கு எதிராக கட்டப்பட்ட தீண்டாமை சுவரை அகற்றுவதில் முக்கிய நடவடிக்கை எடுத்தார்.
2013ஆம் ஆண்டில் தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் இளம் பெண்ணுடன் எய்ட்ஸ் பாதித்த ஆணுக்கு நடைபெற இருந்த திருமணத்தை தடுத்ததற்காக பாராட்டுகளை பெற்றார்.
பெண் சிசுக்கொலைகள் அதிகம் உள்ள மாவட்டங்களாக அறியப்பட்ட தருமபுரியில் பெண் சிசுக்கொலையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் அம்மாவட்டத்தில் நடந்த சிறுநீரக விற்பனை மோசடியை தடுக்க கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
கடந்த 2016ஆம் ஆண்டு மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐக்கு பதவி உயர்வுடன் கூடிய பணியிட மாற்றம் பெற்ற அஸ்ரா கார்க் கடந்த 2002ஆம் ஆண்டு ஐஜியாக பதவி உயர்வு பெற்று மீண்டும் தமிழக பணிக்கு வந்தார்.
அவரை தென்மண்ட ஐஜியாக நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆந்திராவில் கஞ்சாவை பயிரிட்டு மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் விற்பனை செய்யும் கஞ்சா வியாபாரிகளை பிடித்தது மட்டுமின்றி அவர்களின் சொத்துகள், வங்கி கணக்குகளை முடக்கி அவர்களின் கொட்டத்தை அடக்கியதில் அஸ்ரா கார்க்கிற்கு முக்கிய பங்குண்டு.
தென் மாவட்டங்களில் நடைபெறும் சாதி சண்டைகளை கட்டுப்படுத்த குற்றப்பின்னணி இருக்கும் நபர்கள் சாதி அமைப்புகளில் தொடர்பில் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்ததுடன் பழிக்கு பழி, சாதிய மோதல்கள், கோஷ்டி அடிதடி உள்ளிட்டவற்றை முன்கூட்டியே அறிந்து அதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார்.
இந்த நிலையில்தான் கூடுதல் கமிஷனராக சென்னைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் அஸ்ரா கார்க். குற்றச்சம்பவங்கள் அதிகம் நிகழும் வடசென்னையில் ரவுடிகளுக்கு சாவுமணி அடிப்பாரா இந்த அசராத கார்க் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
டாபிக்ஸ்