Ayodhya Ram Temple: ’LED திரைகள் அகற்றம்! கொதித்த நிர்மலா! பதிலளித்த போலீஸ்!’ காஞ்சியில் பரபரப்பு!
Jan 22, 2024, 10:47 AM IST
“Ayodhya Ram Temple: பஜனை பாடல்கள் நிகழ்ச்சிக்கு மட்டுமே அனுமதி அளித்து இருந்ததாகவும், எல்.இ.டி திரைகள், பதாகைகளை வைக்க ஏற்கெனவே அனுமதி மறுத்து இருந்ததாகவும், இதன் அடிப்படையிலேயே அனுமதி மீறி வைக்கப்பட்ட எல்.இ.டி திரைகளை அகற்றியதாகவும் காவல்துறை விளக்கம்”
தமிழ்நாட்டில் இந்துக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டி உள்ள நிலையில் அதற்கு காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெறுகிறது இதனைக் காண மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட எல்இடி திரையில் பொதுமக்களுடன் அமர்ந்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிலையில் காவல்துறை அனுமதி இல்லாததால் எல்இடி திரையை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.
இது தொடர்பாக ட்வீட் செய்திருந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ”காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் அயோத்தியில் நரேந்திர மோடியை நேரடியாக ஒளிபரப்ப 466 எல்இடி திரைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் திரைகளை பறிமுதல் செய்துள்ளனர் அல்லது நேரடி ஒளிபரப்பைத் தடுக்க படைகளை அனுப்பி உள்ளனர்.
எல்இடி சப்ளையர்கள் அச்சத்துடன் ஓடி வருகின்றனர். இந்து விரோத திமுக சிறு வணிகர்களை தாக்குகிறது. தமிழில் இதை “வயித்திலே அடிப்பது” என்பார்கள்.
இந்து சமய அறநிலையத்துறை வசம் உள்ள ஸ்ரீபெரும்புதூர் செல்வ விநாயகர் கோவில், தனியாரால் நடத்தப்படும் மொளச்சூர் கருமாரியம்மன் கோவில், மீண்டும் தனியாரால் நடத்தப்படும் செல்விழிமங்கலம் ஜாம்போதை பெருமாள் கோவில் போன்ற கோவில்களில் தமிழ்நாடு காவல்துறையினரால் அன்னதானம் தடுக்கப்படுகிறது. இந்து விரோத திமுக அரசு காவல்துறையை பயன்படுத்தி அடக்குமுறையை தொடர்கிறது.”என ட்வீட் செய்து இருந்தார்.
எல்.இ.டி திரைகள் அகற்றம் தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. இதில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் பஜனை பாடல்கள் நிகழ்ச்சிக்கு மட்டுமே அனுமதி அளித்து இருந்ததாகவும், எல்.இ.டி திரைகள், பதாகைகளை வைக்க ஏற்கெனவே அனுமதி மறுத்து இருந்ததாகவும், இதன் அடிப்படையிலேயே அனுமதி மீறி வைக்கப்பட்ட எல்.இ.டி திரைகளை அகற்றியதாகவும் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வழிபாட்டுக்கு வரும் மக்களையும், பிரசாதம் தருவதையும் தமிழ்நாடு காவல்துறையினர் தடுப்பதாக கூறி உள்ளார். திமுகவினர் இந்துக்களை வெறுப்பதாகவும், பிரதமர் மோடியை காணவரும் மக்களை தடுக்கும் வகையில் எல்.இ.டி திரைகளை அகற்றுவதாகவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார்.