TRB Raja Became Minister: அமைச்சரவையில் இருந்து ஆவடி நாசர் நீக்கம்! மந்திரி ஆகும் டிஆர்பி ராஜா!
May 09, 2023, 09:51 PM IST
”நாளை மறுநாள் காலை 10.30 மணிக்கு ராஜ்பவனில் நடக்கும் நிகழ்ச்சியில் டிஆர்பி ராஜா புதிய அமைச்சராக பொறுப்பேற்கிறார்.”
தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் விடுவிக்கப்பட்டுள்ளார். நாளை மறுநாள் கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் புதிய அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
”கல்தா கொடுக்கப்பட்ட முதல் அமைச்சர்”
திமுக அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகளை நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், ஏற்கெனவே இரண்டு முறை அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களில் அமைச்சர்களின் துறைகள் மாற்றி வழங்கப்பட்டுள்ளதே தவிர இதுவரை ஒரு அமைச்சர் கூட அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்படவில்லை. இந்த நிலையில் பால் வளத்துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசர் அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
’மந்திரி ஆகும் ராஜா’
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு ஆளுநருக்கு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் மன்னார்குடி சட்டமன்ற தொகுதியை சேர்ந்த டிஆர்பி ராஜா அமைச்சரவையில் சேர்பதற்கான ஒப்புதலை அளுநர் அளித்துள்ளார்.
புதியதாக நியமிக்கப்பட்ட அமைச்சரின் பதவியேற்பு விழா வரும் மே 11ஆம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை ராஜ்பவனில் உள்ள தர்மார் ஹாலில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அமைச்சரவை குழுவில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசரை விடுவிக்க வேண்டும் என்ற முதலமைச்சரின் பரிந்துரைக்கும் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார் என்றும் ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
ராஜாவுக்கு எந்த துறை?
டி.ஆர்.பி.ராஜாவுக்கு எந்த துறை ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிடவில்லை, புதிய அமைச்சர் பதவியேற்புக்கு பின்னர் தமிழ்நாடு அமைச்சரவையில் இலாகா மாற்றம் செய்யப்பட்ட புதிய அமைச்சரவை பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யார் இந்த டி.ஆர்.பி.ராஜா?
திமுக பொருளாளரும், திமுக நாடாளுமன்றக்குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவின் மகனுமான டி.ஆர்.பி.ராஜா, கடந்த 2011, 2016, 2021 ஆகிய தேர்தல்களில் மன்னார்குடி தொகுதியில் இருந்து எம்.எல்.ஏவாக தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார்.
தமிழ்நாடு அமைச்சரவையில் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் அமைச்சர்கள் யாரும் நியமனம் செய்யப்படாமல் இருந்த நிலையில் டிஆர்பி ராஜாவின் நியமனம் மூலம் இந்த விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
டாபிக்ஸ்