Aspirin Tablets : ஆஸ்பிரின் மாத்திரையில் உள்ள ஆபத்து – அமெரிக்கா ஆய்வில் அதிர்ச்சி – எச்சரிக்கும் மருத்துவர்கள்
Jul 30, 2023, 08:55 AM IST
Aspirin Tablets : குறைந்த அளவு (75 மி.கி) ஆஸ்பிரின் மாத்திரை மூளை மண்டல பாதிப்பை (Stroke) தடுக்காது. மூளை மண்டலத்தில் ரத்தக்கசிவையும், அது அதிகமாக ஏற்படுத்துவதால் அதன் பயன்பாடு கூடாது என அமெரிக்க ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவ உலகில் வெகு காலமாக மூளை மண்டல பாதிப்பை தடுக்க (ரத்தம் உறைந்து பாதிப்பை ஏற்படுத்துவது) தட்டணுக்கள் (Platelets) ஒன்றுகூடி ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்க குறைந்த அளவு (75 மி.கி./நாள்) ஆஸ்பிரின் மாத்திரையை பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது அமெரிக்காவின் JAMA (Journal of American Mediacal Association) ஆய்வுக் கட்டுரையில் அந்த மாத்திரையால் ரத்தம் உறைவது தடுக்கப்படுவது என்பது பெருமளவு நடந்து பலன் கிடைக்கவில்லை என்பதுடன், அம்மாத்திரையின் பக்க விளைவாக மூளையில் ரத்தக்கசிவும் ஏற்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது வயதான பெரியவர்களுக்கு, பலன் அளிப்பதை விட அதிக பாதிப்புகளை (முளையில் ரத்தக் கசிவை) ஏற்படுத்துவது தெரிய வந்துள்ளதால், அதன் பயன்பாட்டை நிறுத்துவது நல்லது என ஆய்வு முடிவுகள் சொல்கிறது. இந்த ஆய்வில் 19,114 வயதானவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
9,525 பேருக்கு குறைந்த அளவு ஆஸ்பிரின் (75மி.கி/நாள்) மாத்திரை கொடுத்தும், 9,59 பேருக்கு டம்மி மாத்திரையும் கொடுக்கப்பட்டு 4.7 ஆண்டுகளுக்கு தொடர் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் ரத்தம் உறைதலை தடுப்பதில் ஆஸ்பிரின் மாத்திரை பெரும் பயன் அளிக்கவில்லை என்பதுடன், மூளையில் ரத்தக்கசிவு ஏற்படும் வாய்ப்பை 38 சதவீதம் அதிகரித்துள்ளது எனும் அதிர்ச்சித் தகவல் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
மேலும் வயது மூப்பின் காரணமாக வயதான ஒருவர் கீழே விழும் வாய்ப்பும் அதிகம் உள்ளபோது, ஆஸ்பிரின் மாத்திரை எடுப்பது ரத்த ஒழுக்கு ஏற்பட்டால், ரத்தம் அதிகமாக வெளியாகி பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை மருத்துவர்கள்/நோயாளிகள் உணர்ந்து செயல்பட வேண்டும் என அக்கட்டுரை அறிவுறுத்தியுள்ளது.
வயதானவர்கள் தவிர்த்து, நடுத்தர வயதினருக்கு அம்மாத்திரையால் பலன்கள் அதிகம் என இருந்தால் மட்டுமே, அதை பயன்படுத்துவது குறித்து யோசிக்க வேண்டும்.
2021ம் ஆண்டிலேயே, US Preventive Services Task Force, குறைந்த அளவு ஆஸ்பிரின் மாத்திரையின் பின்விளைவுகளை கருத்தில்கொண்டு, தேவையற்று, எதற்கெடுத்தாலும், அம்மாத்திரையை பயன்படுத்துவது அறிவியல் ரீதியாக சரியல்ல என்றும், மூளையில் மற்றும் உள் உறுப்புகளில் (எடுத்துக்காட்டாக - வயிறு) ரத்தக்கசிவை அம்மாத்திரை ஏற்படுத்தக்கூடும் என்பதை கருத்தில்கொண்டே முடிவுகள் எடுப்பது சிறந்தது என கருத்து தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வு முடிவுகளை கருத்தில்கொண்டு தமிழகத்திலும் தேவையற்று ஆஸ்பிரின் மாத்திரையின் பயன்பாட்டை தடுப்பதே, அம்மாத்திரையின் மோசமான பின்விளைவுகளிலிருந்து தப்பிக்கும் ஒரே வழி என்பதால் மருத்துவர்களும், நோயாளிகளும் இந்த விஷயங்களை கருத்தில்கொண்டு முடிவுகளை எடுப்பது சிறந்தது. மாத்திரை உட்கொள்வதில் மக்கள் முடிவெடுப்பதை அறிவியல் தீர்மானிக்கட்டும் என்று மருத்துவர் புகழேந்தி அறிவுறுத்தியுள்ளார்.
டாபிக்ஸ்