Exams Dates : ஒத்திவைக்கப்பட்ட தேர்வு - மாற்று தேதி அறிவித்த அண்ணா பல்கலைக்கழகம்
Dec 13, 2022, 06:59 AM IST
மாண்டஸ் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறும் மாற்று தேதிகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது
வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல், தீவிர புயலாக வலுவடைந்தது. இதனைத் தொடர்ந்து வலுகுறைந்த நிலையில் புயலாக மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது. அப்போது பலத்த காற்று வீசியது. மரங்களும் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்களும் சாய்ந்து விழுந்தன.
இந்த மாண்டஸ் புயல் எதிரொலியாக கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த அண்ணா பல்கலை. செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. புயல் காரணமாக பல மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் தேதி குறிப்பிடாமல் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்க தேர்வுகளுக்கு மறுதேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் 9, டிசம்பர் 10 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் முறையே டிசம்பர் 24 மற்றும் டிசம்பர் 31 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சியின் மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வரும் 14 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
வடகிழக்கு திசையில் இருந்து மீண்டும் காற்று வீச தொடங்க உள்ளதால் கனமழை பெய்யலாம் என்று இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. மேலும், புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் வடக்கே உள்ள மாவட்டங்களில் மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13ஆம் தேதி அதாவது இன்று தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
14ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டாபிக்ஸ்