தமிழ் செய்திகள்  /  latest news  /  Anna University : அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு - துணை வேந்தர் வேல்ராஜ்!

Anna University : அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு - துணை வேந்தர் வேல்ராஜ்!

Divya Sekar HT Tamil

Nov 18, 2023, 12:43 PM IST

google News
அண்ணா பல்கலைக்கழகம் உறுப்பு பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுக் கட்டண உயர்வு அறிவிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக துணை வேந்தர் வேல்ராஜ் அறிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகம் உறுப்பு பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுக் கட்டண உயர்வு அறிவிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக துணை வேந்தர் வேல்ராஜ் அறிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகம் உறுப்பு பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுக் கட்டண உயர்வு அறிவிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக துணை வேந்தர் வேல்ராஜ் அறிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ், தமிழகம் முழுவதும் 400க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் 4 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் இளநிலை, முதுநிலை பொறியியல் பட்டப்படிப்புகளை படித்து வருகின்றனர்.

இவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும், நவம்பர் - டிசம்பர் மாதத்திலும், ஏப்ரல் - மே மாதத்தில் செமஸ்டர் தேர்வு நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், மாணவர்கள் செமஸ்டர் தேர்விற்கு தயாராகி வரும் நேரத்தில் அண்ணா பல்கலைக்கழகம் தேர்வு கட்டணத்தை 50 சதவீதம் உயர்த்தியது மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதாவது அண்ணா பல்கலைகழகத்தில் தேர்வு கட்டணமாக ரூ.150 பெறப்பட்டு வந்த நிலையில், தற்போது தேர்வு கட்டணம் 50% உயர்த்தப்பட்டு ரூ.225 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு செமஸ்டருக்கு 9 தாள்கள் எழுத வேண்டிய நிலையில், தேர்வு கட்டணமாக ரூ.2050 செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதே போன்று டிகிரி சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் ரூ.1000-ல் இருந்து ரூ.1500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இறுதியாண்டு மாணவர்கள் ப்ராஜெக்ட் செய்வதற்கு ரூ.600 பெறப்பட்டு வந்த நிலையில் ரூ.300 உயர்த்தப்பட்டு ரூ.900 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

50% கட்டண உயர்வை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் உடனடியாக இந்த கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்றும் மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கட்டண உயர்வுக்கு அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உறுப்பு பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுக் கட்டண உயர்வு அறிவிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த செமஸ்டரில் பழைய கட்டண நடைமுறையே பின்பற்றப்படும். கூடுதலாக தேர்வு கட்டணம் வசூலிக்கப்பட்ட கல்லூரிகளில் மாணவர்களுக்கு திரும்பி தர துணை வேந்தர் வேல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், “உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உத்தரவின் பேரில் தேர்வு கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. அடுத்த செமஸ்டரில் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிப்பதை அமல்படுத்த அமைச்சர் அறிவுறுத்தினார். நடப்பாண்டு மாணவர்கள் பழைய தேர்வு கட்டணத்தை செலுத்தலாம். கூடுதலாக வசூலிக்கப்பட்ட பணம் மாணவர்களிடம் திருப்பி அளிக்கப்படும். அமைச்சர் உத்தரவு தொடர்பாக சிண்டிகேட் உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெறப்படும். பொதுவாக கட்டணத்தை 100% உயர்த்தியிருக்க வேண்டும். ஆனால் 9 ஆண்டுகளுக்குப் பின் 50% மட்டுமே உயர்த்தியுள்ளோம்’ என வேல்ராஜ் தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

அடுத்த செய்தி