Anbumani: தமிழக மீனவர்கள் 10 பேர் கைது.. தொடரும் இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்.. அன்புமணி ஆவேசம்
Jun 25, 2024, 03:34 PM IST
Anbumani: இலங்கை கடற்படையினரின் அத்துமீறலை முடிவுக்கு கொண்டு வர அனைத்து வகையான நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்ட மீனவர்கள் 10 பேரை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை இன்று (ஜூன் 25) கைது செய்துள்ளது தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இலங்கை கடற்படையினரின் அத்துமீறலை முடிவுக்கு கொண்டு வர அனைத்து வகையான நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்திலிருந்து வங்கக்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நாகை மாவட்டம் மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 10 மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்கள் மீன்பிடிக்கச் சென்ற படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்களக் கடற்படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
36 மீனவர்கள் கைது
கடந்த ஜூன் 17-ஆம் தேதி வங்கக்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த இரு நாட்களுக்கு முன் இராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டனர். அதனால் ஏற்பட்ட பதற்றம் அடங்குவதற்கு முன்பாகவே மேலும் 10 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரே வாரத்தில் மொத்தம் 36 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவிடம் உதவிகளைப்பெறும் இலங்கை அரசு, இந்தியாவை சற்றும் மதிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள், அரசு முறைப் பயணமாக இலங்கைக்கு சென்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ள நிலையில், அவர் அங்கிருந்த போதும், அங்கிருந்த திரும்பிய பிறகும் தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்கிறது என்றால், இந்தியாவுக்கு இலங்கை எந்த அளவுக்கு நன்றியுடனும், மதிப்புடனும் நடந்து கொள்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் கைது செய்யப்படுவது மீனவர்கள் நலன் சார்ந்த சிக்கல் மட்டுமல்ல. உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு சம்பந்தப்பட்ட சிக்கல் ஆகும். எனவே, தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்சினையில் இலங்கை படையினரின் அத்துமீறலை முடிவுக்கு கொண்டு வர அனைத்து வகையான நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்." இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.
10 மீனவர்கள் கைது
நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த ஆனந்த் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியைச் சேர்ந்த 10 மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இன்று அதிகாலை அவர்கள் இந்திய கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் 10 பேரையும் கைது செய்தனர். இலங்கை கடற்பகுதியில் நெடுந்தீவு அருகே எல்லை தாண்டிவந்து மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
முதல்வர் ஸ்டாலின் கடிதம்
கடந்த சில தினங்களுக்கு முன்பு ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 22 மீனவர்களையும், அவர்களின் மூன்று விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்தது. அவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நேற்று கடிதம் எழுதி இருந்தார். இந்தச் சூழலில் நாகை மாவட்ட மீனவர்கள் 10 பேரை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை இன்று காலை கைது செய்துள்ளது தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.