Ambedkar Photo: ’நீதிமன்றங்களில் அம்பேத்கர் படம் அகற்றப்படாது’ தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்றது நீதிமன்றம்!
Jul 24, 2023, 09:56 PM IST
”தலைமை நீதிபதி அவர்களிடம் அண்ணல் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படக்கூடாது என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டினை மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் அவர்கள் கடிதம் வழங்கி நேரில் தெரிவித்தார்”
நீதிமன்றங்களில் அண்ணல் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படக்கூடாது என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு ஏற்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நீதிமன்றங்களில் அண்ணல் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படும் என்ற செய்தி பரவியதைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் திரு.எஸ்.ரகுபதி அவர்கள் மாண்பமை மெட்ராஸ் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி நீதியரசர் சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலா அவர்களைச் சந்தித்து இது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
தலைமை நீதிபதி அவர்களிடம் அண்ணல் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படக்கூடாது என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டினை சட்டத்துறை அமைச்சர் அவர்கள் கடிதம் வழங்கி நேரில் தெரிவித்தார். தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டைக் கேட்டறிந்த தலைமை நீதிபதி அவர்கள், நீதிமன்றங்களில் எந்த தலைவர்களின் புகைப்படத்தையும் அகற்ற உத்தரவிடப்படவில்லை. தற்போது உள்ள நடைமுறையே தொடரும் (Status Quo to be continued) எனத் தெரிவித்தார். இத்தகவல் வழக்கறிஞர் மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது என தமிழ்நாடு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.