Chennai : பெற்றோர்கள் பயப்படவேண்டாம்.. வெடிகுண்டு மிரட்டல் விவகாரம்.. 13 தனியார் பள்ளிகளும் இன்று வழக்கம்போல் இயங்கும்!
Feb 09, 2024, 08:31 AM IST
சென்னையில் ஒரே நேரத்தில் 13 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில், தனியார் பள்ளி ஒன்றுக்கு நேற்று காலை 10.30 மணியளவில் வந்த இ-மெயிலில் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது சற்று நேரத்தில் வெடித்து சிதறும். முடிந்தால் தடுத்து உயிரை காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகத்தினர், உடனடியாக இதுகுறித்து மாநகர காவல் ஆணையருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, உடனடி நடவடிக்கை எடுக்கும்படி கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹாவுக்கு காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து மிரட்டல் விடுத்த நபரின் இ-மெயில் முகவரியை அடிப்படையாக வைத்து சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் தனிப்படை போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.
இதற்கிடையே, மிரட்டல் விடுக்கப்பட்ட தனியார் பள்ளிக்கு விரைந்து சென்ற போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் பள்ளி வளாகம், வகுப்பறை, மாணவரின் புத்தகப் பைகள் என அனைத்து இடங்களிலும் சல்லடை போட்டு தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அடுத்தடுத்து மேலும் சில தனியார் பள்ளிகளில் இருந்தும், தங்கள் பள்ளிக்கும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக காவல் ஆணையருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அந்த வகையில், அண்ணா நகர்,சாஸ்திரி நகர், பாரிமுனை, கிண்டி, ஆர்.ஏ.புரம், ஓட்டேரி, கீழ்ப்பாக்கம், கோபாலபுரம், துரைப்பாக்கம், நந்தம்பாக்கம், மடிப்பாக்கம், ஆவடிகாவல் ஆணையரக எல்லையில் உள்ள காட்டுப்பாக்கம் அடுத்த கோபுரசநல்லூர், திருமழிசை ஆகிய பகுதிகளில் உள்ள 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து அனைத்து இடங்களுக்கும் போலீசார் விரைந்தனர். இதனை தொடர்ந்து பள்ளி வாகனத்தில் மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். பள்ளிக்கும் அரை நாள் விடுமுறை வழங்கப்பட்டது.
இந்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான செய்தி, பிற பள்ளிகளுக்கும் பரவியது. இதனால் மிரட்டல் விடுக்கப்படாத பல பள்ளிகளும், தங்கள் பள்ளிக்கு அரைநாள்விடுமுறை அளித்து மாணவ, மாணவிகளை வீட்டுக்கு அனுப்பினர்.
இந்நிலையில் போலீசார் இதுகுறித்து கூறுகையில், வெடிகுண்டு மிரட்டல்கள் அனைத்தும் இ-மெயில் வாயிலாக விடுக்கப்பட்டுள்ளது. மிரட்டலுக்கு உள்ளான கல்வி நிறுவனங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
வெடிபொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. எனவே, மிரட்டல் என்பது புரளி. மிரட்டல் விடுத்த நபரைக்கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றவாளியை விரைவில் கைது செய்வோம்” என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்ட 13 தனியார் பள்ளிகளும் இன்று வழக்கம்போல் இயங்கும். பெற்றோர்கள் பயப்படாமல் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும் என சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வெடிகுண்டு சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்