தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Admk: சிதம்பரமும், கபில் சிபிலும் பொய்யர்கள்! போட்டு விளாசிய அதிமுக எம்.பி. தம்பிதுரை! ஆட்டம் கண்ட மாநிலங்களவை!

ADMK: சிதம்பரமும், கபில் சிபிலும் பொய்யர்கள்! போட்டு விளாசிய அதிமுக எம்.பி. தம்பிதுரை! ஆட்டம் கண்ட மாநிலங்களவை!

Kathiravan V HT Tamil

Jul 25, 2024, 09:20 PM IST

google News
நீட் தேர்வை காங்கிரஸ் அரசுதான் கொண்டு வந்தது, இதற்கு தேசிய ஜனநாயக கூட்டணியை காரணம் சொல்ல முடியாது (ANI )
நீட் தேர்வை காங்கிரஸ் அரசுதான் கொண்டு வந்தது, இதற்கு தேசிய ஜனநாயக கூட்டணியை காரணம் சொல்ல முடியாது

நீட் தேர்வை காங்கிரஸ் அரசுதான் கொண்டு வந்தது, இதற்கு தேசிய ஜனநாயக கூட்டணியை காரணம் சொல்ல முடியாது

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் ஆன ப.சிதம்பரம் மற்றும் கபில்சிபில் ஆகியோரை பொய்யர்கள் என அதிமுக எம்.பி தம்பிதுரை விமர்சனம் செய்துள்ளார். 

பட்ஜெட்டில் அனைத்து பிரிவினருக்கும் கவனம் செலுத்தப்பட்டு உள்ளது

மாநிலங்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய அதிமுக எம்.பி. தம்பிதுரை, வரவு-செலவுத் திட்டத்தைப் பகுப்பாய்வு செய்தால், அரசாங்கம் சம்பந்தப்பட்ட செலவினங்களுக்காக 48. 2 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் பெரும்பகுதியை உருவாக்கும் வரி வருவாய் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் விவசாயம் முதல் திறன், எம்எஸ்எம்இ, எரிசக்தி துறை, மாநிலங்களின் நகர்ப்புற மற்றும் கிராமப்புற வளர்ச்சி, இளைஞர்கள் என அனைத்து பிரிவினருக்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சமூகநீதியில் தமிழ்நாடு முன்னோடி 

சமூகநீதியை வழங்குவதில் தமிழ்நாடு முன்னோடியாக திகழ்ந்து உள்ளது. மதிய உணவு திட்டம், இலவச கல்வி, தாலிக்கு தங்கம், விலையில்லா மடிக்கணினிகள், விலையில்லா மிதிவண்டிகள், ஏழைகளுக்கு கால்நடைகள் விநியோகம், அம்மா உணவகம், அம்மா மருந்தகம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. 

சிதம்பரம், கபில்சிபில் மீது விமர்சனம்

தற்போதைய தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் கூடுதல் நிதியை கேட்கின்றது. காங்கிரஸ் கட்சியில் இரண்டு பொய்யர்கள் உள்ளனர். ஒருவர் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் மற்றொருவர் முன்னாள் கல்வி அமைச்சர் கபில் சிபில். 

கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியது யார்?

கூட்டணி குறித்து காங்கிரஸ் கட்சியினர் பேசுகின்றனர். ஆனால் நீட் தேர்வை காங்கிரஸ் கட்சிதான் கொண்டு வந்தது. மாநிலப்பட்டியலில் இருந்த கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியது யார். 1976 அவசர நிலை கால கட்டத்தில் இது மாற்றம் செய்யப்பட்டது. பல ஆண்டுகளாக மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்த திமுக இதற்காக என்ன செய்தது. 

நீட் தேர்வுக்கு பாஜக காரணம் அல்ல

தமிழ்நாட்டில் தலித் தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டு உள்ளார். 200 நாட்களில் 585 கொலைகள் தமிழ்நாட்டில் நடைபெற்று உள்ளன. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. நீட் தேர்வை காங்கிரஸ் அரசுதான் கொண்டு வந்தது, இதற்கு தேசிய ஜனநாயக கூட்டணியை காரணம் சொல்ல முடியாது என தம்பிதுரை பேசினார். 

மத்திய பட்ஜெட்டில் சொன்னது என்ன?

மூன்றாவது முறையாக பொறுப்பேற்று உள்ள மோடி அரசின் சார்பில் முதல் நிதிநிலை அறிக்கை நாடாளுமன்ற மக்களவையில் ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.

நிர்மலா சீதாராமன் உரை

நாடாளுமன்ற மக்களவையில் பட்ஜெட் உரையை வாசித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கத்தின் மீது இந்திய மக்கள் நம்பிக்கை வைத்து, வரலாற்று சிறப்புமிக்க மூன்றாவது முறையாக அதை மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளனர். ஏழைகள், பெண்கள், விவசாயிகள், இளைஞர்களை மையப்படுத்தி பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.

9 முன்னுரிமைகள்

ஒன்பது முன்னுரிமைகளில் உற்பத்தி, வேலைகள், சமூக நீதி, நகர்ப்புற மேம்பாடு, எரிசக்தி பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, புதுமை மற்றும் சீர்திருத்தங்கள் ஆகியவை அடங்கியதாக இருக்கும் என தெரிவித்த அவர், காலநிலையை எதிர்க்கும் விதைகளை உருவாக்குவதற்கான ஆராய்ச்சியின் விரிவான மதிப்பாய்வை அரசாங்கம் மேற்கொள்கிறது என தெரிவித்தார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவார்கள் என்ற அவர், உற்பத்தியை அதிகரிக்க பெரிய அளவிலான காய்கறி உற்பத்தி கிளஸ்டர்கள் ஊக்குவிக்கப்படும் என்று கூறினார்.

பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம்

பட்ஜெட் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றன. கூட்டணி கட்சிகளை சமாதானம் செய்வதற்காக பட்ஜெட் தயார் செய்யப்பட்டு உள்ளதாக ராகுல் காந்தி விமர்சித்து உள்ளார். மற்ற மாநிலங்களுக்கு வெற்று வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டணி கட்சிகளை சமாதானம் செய்ய பட்ஜெட் தயார் செய்யப்பட்டு உள்ளது. இதில் சாதாரண இந்தியருக்கு எந்த நிவாரணமும் இல்லை. காங்கிரஸ் கட்சியின் முந்தைய பட்ஜெட் மற்றும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கைகளை காப்பி அடித்து பட்ஜெட் தயார் செய்யப்பட்டு உள்ளது என விமர்சனம் செய்து உள்ளார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை