EPS opposes criminal laws: ’அப்பட்டமான இந்தி திணிப்பு! நடைமுறைக்கு வந்த குற்றவியல் சட்டங்கள்!’ பாஜகவை விளாசும் ஈபிஎஸ்!
Jul 01, 2024, 11:39 PM IST
EPS opposes criminal laws: அனைத்து மாநிலங்களுக்கும் பொது மொழியான ஆங்கிலத்தில் இருந்த சட்டத்தின் பெயர்களை இந்தியில் மாற்றியிருப்பது அப்பட்டமான இந்தி திணிப்பு என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்
மூன்று புதிய குற்றவியல் நடைமுறை சட்டங்கள் அமல்படுத்தப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
புதிதாக அமல் ஆன 3 குற்றவியல் சட்டங்கள்
நாட்டின் குற்றவியல் நீதி அமைப்பை முற்றிலுமாக மாற்றியமைக்கும் நடவடிக்கையில், மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று (ஜூலை 1) முதல் நடைமுறைக்கு வந்து உள்ளன.
இந்திய தண்டனைச் சட்டம் (IPC), 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC), 1973 மற்றும் இந்திய ஆதாரங்கள் சட்டம், 1872 ஆகியவற்றுக்கு மாற்றாக, கடந்த டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பாரதிய நியாய சன்ஹிதா (BNS), பாரதிய நாக்ரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) மற்றும் பாரதிய சாக்ஷய அதினியம் (BSA) ஆகிய சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.
இதன் மூலம் சமகால காலத்திற்கும் நடைமுறையில் உள்ள தொழில்நுட்பங்களுக்கும் ஏற்றவாறு மூன்று புதிய குற்றவியல் சட்டங்களில் பல புதிய விதிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
’அனைவருக்கும் நீதிக்கான அணுகலை தருவது’
மூன்று புதிய சட்டங்கள் டிசம்பர் 21, 2023 அன்று நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்றன. ஜனாதிபதி திரௌபதி முர்மு டிசம்பர் 25, 2023 அன்று ஒப்புதல் அளித்தார். அரசு அறிவிப்பின்படி, மூன்று சட்டங்களும் தண்டனையை விட நீதியில் கவனம் செலுத்தும் மற்றும் விரைவான நீதியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன, நீதித்துறை மற்றும் நீதிமன்ற மேலாண்மை முறையை வலுப்படுத்தி, ‘அனைவருக்கும் நீதிக்கான அணுகலை தருவது’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பாரதிய நியாய சன்ஹிதாவில் 511 பிரிவுகளுக்கு பதிலாக 358 பிரிவுகள் இருக்கும். இந்த மசோதாவில் மொத்தம் 20 புதிய குற்றங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 83 குற்றங்களுக்கு அபராதத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. 23 குற்றங்களுக்கு கட்டாய குறைந்தபட்ச தண்டனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆறு குற்றங்களுக்கு சமூக சேவை தண்டனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கூட்டு பாலியல் பலாத்கார வழக்குகளில் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்க சன்ஹிட்டா சட்டம் வழிவகை செய்கின்றது. பாரதிய நியாய சன்ஹிதாவில் முதன்முறையாக பயங்கரவாதம் என்ற சொல்லாடல் வரையறுக்கப்பட்டு, அது தண்டனைக்குரிய குற்றமாக ஆக்கப்பட்டுள்ளது.
ஆயுதமேந்திய கிளர்ச்சி, சீர்குலைவு நடவடிக்கைகள், பிரிவினைவாத நடவடிக்கைகள் அல்லது இந்தியாவின் இறையாண்மை அல்லது ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை அச்சுறுத்தும் எந்தவொரு செயலும் புதிய விதிகளில் அடங்கும். சிறிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களும் குற்றமாக்கப்பட்டுள்ளன, ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
எடப்பாடி பழனிசாமி கண்டனம்
இந்த நிலையில் மூன்று கிரிமினல் சட்டங்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக ’எக்ஸ்’ வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள இடுகையில், இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றில் இந்திய அரசு மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது.
மாற்றங்களில் சில விமர்சனத்திற்கு உட்பட்டதாகவே இருக்கிறது , முக்கியமாக சட்டத்தின் பெயர்கள் சமஸ்கிருதம் கலந்த இந்தி மொழியில் மாற்றப்பட்டிருப்பது ஏற்கத்தக்கதல்ல மற்றும் மிகுந்த கண்டனத்திற்குரியதும் கூட,
அனைத்து மாநிலங்களுக்கும் பொது மொழியான ஆங்கிலத்தில் இருந்த சட்டத்தின் பெயர்களை இந்தியில் மாற்றியிருப்பது அப்பட்டமான இந்தி திணிப்பு.
இந்தி திணிப்பாணது
பல மொழிகள் -
பல கலாச்சாரங்கள் சங்கமித்திற்கும்
நமது தேசத்தின் அடிப்படை நீதிக்கும் அரசியலமைப்பு விழுமியங்களுக்கும் எதிரானது,
இன்று முதல் அமலுக்கு வந்துள்ள புதிய சட்டங்களை மாற்றியமைத்து இச்சட்டத்தில் உள்ள குளறுபடிகளை நெறிப்படுத்தி, சமஸ்கிருதம் கலந்த இந்தி மொழியில் உள்ள சட்டத்தின் பெயர்களை மீண்டும் ஆங்கிலத்திலேயே மாற்றம் செய்யவேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்துகிறேன் என தெரிவித்து உள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:-
Google News: https://bit.ly/3onGqm9