தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Admk: சேலத்தில் வெட்டிக் கொல்லப்பட்ட அதிமுக நிர்வாகி! கண்ணீர் விட்டு அழுதபடி ஈபிஎஸ் பேட்டி! சோகத்தில் தொண்டர்கள்!

ADMK: சேலத்தில் வெட்டிக் கொல்லப்பட்ட அதிமுக நிர்வாகி! கண்ணீர் விட்டு அழுதபடி ஈபிஎஸ் பேட்டி! சோகத்தில் தொண்டர்கள்!

Kathiravan V HT Tamil

Jul 04, 2024, 09:58 PM IST

google News
சண்முகம் அவர்கள் ஆரம்ப காலகட்டம் முதல் அதிமுகவில் பணியாற்றி, மக்களிடம் நன்மதிப்பை பெற்றவர். எல்லா தேர்தல்களிலும் அர்பணிப்போடு பணியாற்றி செயல்பட்ட தொண்டர் அவர் என கம்மிய குரலில் ஈபிஎஸ் வேதனை பேட்டி
சண்முகம் அவர்கள் ஆரம்ப காலகட்டம் முதல் அதிமுகவில் பணியாற்றி, மக்களிடம் நன்மதிப்பை பெற்றவர். எல்லா தேர்தல்களிலும் அர்பணிப்போடு பணியாற்றி செயல்பட்ட தொண்டர் அவர் என கம்மிய குரலில் ஈபிஎஸ் வேதனை பேட்டி

சண்முகம் அவர்கள் ஆரம்ப காலகட்டம் முதல் அதிமுகவில் பணியாற்றி, மக்களிடம் நன்மதிப்பை பெற்றவர். எல்லா தேர்தல்களிலும் அர்பணிப்போடு பணியாற்றி செயல்பட்ட தொண்டர் அவர் என கம்மிய குரலில் ஈபிஎஸ் வேதனை பேட்டி

சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் கொலை செய்யப்பட்ட அதிமுக பிரமுகர் சண்முகம் இல்லத்திற்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். 

தெரு விளக்குகள் அணைக்கப்பட்டு கொலை 

அப்போது பேசிய அவர், கட்சி அலுவலகத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய போது, சண்முகம் அவர்களை தாக்கி படுகொலை செய்து உள்ளனர். இது கடும் கண்டனத்திற்கு உரியது. நெஞ்சை பதற வைக்கும் செயல். அவர் படுகொலை செய்யும் போது வீதியில் உள்ள தெரு விளக்குகள் அணைக்கப்பட்டு உள்ளது. இந்த படுகொலைக்கு காரணம் ஆனவர் சதீஷ், தனலட்சுமி மற்றும் இன்னும் பலர் ஈடுபட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு 

இந்த படுகொலையில் தொடர்பு உடைய பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். சிலரை தேடி வருகின்றனர். திட்டமிட்டு இந்த கொலை நடந்து உள்ளது. விடியா திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதை நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றேன். 

சண்முகம் அவர்கள் ஆரம்ப காலகட்டம் முதல் அதிமுகவில் பணியாற்றி, மக்களிடம் நன்மதிப்பை பெற்றவர். எல்லா தேர்தல்களிலும் அர்பணிப்போடு பணியாற்றி செயல்பட்ட தொண்டர் அவர். கழகத்திற்காக உழைத்த கழகத் தொண்டனை கொடியவர்கள் கொலை செய்து, அவர் குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்தி உள்ளனர். 

சட்டப்படி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

இந்த ஆட்சியில் தொடர் கொலைகள் நடந்து கொண்டே இருக்கின்றது. கொலைகள் நடைபெறாத நாளே இல்லை. இந்த கொலை குற்றத்தை செய்தவர், போதை பொருள் மற்றும் லாட்டரி சீட்டுகளை விற்றதாகவும் செய்திகள் வந்து உள்ளன. சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்ட நபர் குறித்து காவல் நிலையத்தில் சண்முகம் அவர்கள் புகார் செய்ததால், சதீஸ் மற்றும் அவரோடு சேர்ந்து குற்றவாளிகள் படுகொலை செய்து உள்ளனர். 

கொலை குற்றத்தில் ஈடுபட்டு உள்ள அனைவரையும் கைது செய்து, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சண்முகம் அவர்களை இழந்து வாடும், குடுபத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என கூறினார்.

ஈபிஎஸ் கண்டன அறிக்கை 

முன்னதாக இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்த எடப்பாடி பழனிசாமி, ”சேலம் மாநகர் மாவட்டம், கொண்டலாம்பட்டி பகுதிக் கழகச் செயலாளர் திரு. M. சண்முகம் அவர்கள் நேற்று இரவு அவரது வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தபோது அங்கே மறைந்திருந்த கொலையாளிகள் அவரை வழிமறித்து கொடுரமாகப் படுகொலை செய்துள்ளனர். இவருக்கு மனைவி, திருமணமான மகள் மற்றும் மகன் ஆகியோர் உள்ளனர்.

திரு. சண்முகம் அவர்கள் தனது சிறு வயதிலேயே கழகத்தில் இணைந்து, சேலம் மாநகர் மாவட்டம், 55-ஆவது வட்டக் கழகச் செயலாளராகவும், தொடர்ந்து 22 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டலாம்பட்டி பகுதிக் கழகச் செயலாளராகவும் திறம்பட பணியாற்றியவர். மேலும், 2001-2006 மற்றும் 2011-2016 என்று இருமுறை சேலம் மாநகராட்சி, கொண்டலாம்பட்டி மண்டலக் குழுத் தலைவராக திறம்பட பணியாற்றி உள்ளார். உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என அனைத்துத் தேர்தல்களிலும் முழு ஈடுபாட்டுடன் கழகப் பணியாற்றி மக்களிடத்திலும், கட்சித் தொண்டர்களிடத்திலும் அன்பாகப் பழகி நன்மதிப்பைப் பெற்றவர். அப்படிப்பட்ட ஒரு சிறந்த தொண்டரை இன்று நாம் இழந்துள்ளது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது. தினசரி கொலை, கொள்ளை நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது என்று பலமுறை நான் கூறியபோதும், இந்த விடியா திமுக அரசு சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை. 

நேற்று (3.7.2024) இரவு சுமார் 10 மணி அளவில், திரு. சண்முகம் தனது வீட்டிற்கு அருகில் சென்று கொண்டிருந்தபோது, கொலையாளிகள் அந்தப் பகுதியில் உள்ள தெரு விளக்குகளை துண்டித்தும், அங்குள்ள CCTV கேமராக்களை உடைத்தும், திட்டமிட்டு கொடூரமான முறையில் அவரை படுகொலை செய்துள்ளனர். சம்பவ இடத்திலேயே அவர் மரணமடைந்துள்ளார். - இச்சம்பவத்திற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். இக்கொலைக் குற்றத்தில் சம்பந்தப்பட்ட அனைத்துக் குற்றவாளிகளையும் உடனடியாகக் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

கழகத்தின் தீவிர விசுவாசி அன்புச் சகோதரர் திரு. சண்முகம் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.”என தெரிவித்து உள்ளார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:-

https://twitter.com/httamilnews 

Google News: https://bit.ly/3onGqm9 

இந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

https://www.whatsapp.com/channel/0029Va9NEUA7IUYU4eBTc81v 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை