தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  'சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கியது செல்லும்'- ட்விஸ்ட் கொடுத்த ஓபிஎஸ் தரப்பு.. நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

'சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கியது செல்லும்'- ட்விஸ்ட் கொடுத்த ஓபிஎஸ் தரப்பு.. நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

Karthikeyan S HT Tamil

Nov 03, 2023, 07:48 PM IST

google News
AIADMK General Secretary case: சசிகலாவை இடைக்கால பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.
AIADMK General Secretary case: சசிகலாவை இடைக்கால பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

AIADMK General Secretary case: சசிகலாவை இடைக்கால பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

அதிமுக பொதுச்செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர்,அக்கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரனும் அதிமுக பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் அதிமுக பொதுக்குழு கூடியது. இந்த கூட்டத்தில் சசிகலா, தினகரன் ஆகிய இருவரையும் கட்சியில் இருந்து நீக்கி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தன்னை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கிய தீர்மானத்தை எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கை தொடர சசிகலாவுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை என கூறி அவரது மனுவை நிராகரித்து உத்தரவிட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு நேற்று (நவ.02) விசாரணை நடைபெற்றது. அப்போது, அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளாக இருந்த ஓ.பன்னீர் செல்வம் முன்மொழிந்து, எடப்பாடி பழனிசாமி வழிமொழிந்த தன்னை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லாது என சசிகலா தரப்பு வாதத்தை முன்வைத்தது. மேலும், கட்சியில் இருந்து தன்னை நீக்கவோ, கட்சி விதிகளில் மாற்றம் செய்யவோ அதிகாரமில்லை எனவும் சசிகலா தரப்பு தெரிவித்திருந்தது.

கடந்தாண்டு ஜூலையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் நீக்கப்பட்டு, சட்டவிதிகளில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. அதன்படி, பொதுச் செயலாளர் பதவி மீண்டும் உருவாக்கப்பட்டது என எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிபதிகள் சசிகலாவின் மேல்முறையீட்டு வழக்கு மீதான விசாரணை இன்று (நவ.03) நடைபெறும் எனத் தெரிவித்திருந்தார். அதன்படி, இந்த வழக்கு இரண்டாவது நாளாக நீதிபதிகள் சுப்பிரமணியம், செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கடந்த 2016ஆம் ஆண்டு இடைக்கால பொதுச்செயலாளராக சசிகலாவை தேர்ந்தெடுத்த பொதுக்குழு கூட்டத்திற்கான நோட்டீஸ் அனுப்பியது யார் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அதிமுக தரப்பு மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், 2016 மற்றும் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக் குழு கூட்டங்களுக்கு தலைமை கழகம் மூலம் நோட்டீஸ் அனுப்பியதாகவும், அதில் எடுக்கப்பட்ட முடிவுகளை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளதாக தெரிவித்தார்.

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கபட்ட எடப்பாடி பழனிசாமி தான் கட்சியின் பொதுச்செயலாளர் என்றும், வேட்பாளருக்கான சின்னத்தை ஒதுக்குவதற்கான விண்ணப்பத்தில் கையெழுத்திடுவற்கான அதிகாரம் அவருக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது, தேர்தல் ஆணையமும் இதை அங்கீகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து, ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர், கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், இடைக்கால பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளராக தானும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையே தற்போது வரை நீடிப்பதாகவும், இடைக்கால பொதுச்செயலாளராக சசிகலாவை நீக்கியது செல்லும் எனவும் வாதிட்டார். வழக்கில் வாதங்கள் நிறைவடையாததால், விசாரணையை நவம்பர் 6ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.
அடுத்த செய்தி