Gayathri Raghuram: அதிமுகவில் ஐக்கியமாகிய நடிகை காயத்ரி ரகுராம்!
Jan 19, 2024, 02:38 PM IST
Gayathri Raghuram Join ADMK: நடிகை காயத்ரி ரகுராம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தாா்.
பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அக்கட்சியில் சேர்ந்துள்ளாா்.
நடிகையும், நடனக் கலைஞருமான காயத்ரி ரகுராம் பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு, அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவராக செயல்பட்டு வந்தார். இந்தச் சூழலில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார் நடிகை காய்த்ரி ரகுராம்.
தொடர்ந்து பாஜக மாநில தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நடிகை காயத்ரி ரகுராம் கடந்த 2022 நவம்பர் மாதம் கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால் பாஜகவில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் 6 மாத காலத்திற்கு நீக்கப்படுகிறார் என்று மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தாா்.
இதன் பின்னர், கனத்த இதயத்துடன் பாஜகவில் இருந்து தானே விலகுவதாக காயத்ரி ரகுராம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அதிரடியாக அறிவித்தார். பெண்களுக்கு சம உரிமையும் மரியாதையும் கொடுக்காத காரணங்களுக்காக தமிழக பாஜகவில் இருந்து விலகுவதாகவும் அவர் தெரிவித்திருந்தாா்.
இதனைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் தமிழக பாஜகவையும், அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையையும் கடுமையாக விமர்சித்து பதிவிட்டு வந்தார்.
இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இன்று (ஜன.19) நேரில் சந்தித்து தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டுள்ளார். இதனை அதிமுக செய்தித் தொடர்பாளர் சிஆர்டி நிர்மல்குமார் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து காயத்ரி ரகுராம் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்திருந்த பேட்டியில், "கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் எனக்கு வெளிநாடு, அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டது. என் தரப்பு விளக்கத்தை கேட்காமலே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்சிக்கு கலங்கம் விளைவித்ததாக கூறி அறிக்கை வெளியாகி இருக்கிறது.
தனிப்பட்ட முறையில் என்னை தாக்கியவர்களுக்கு, நேரடியாக பதிலடி கொடுத்தேன். நான் கட்சிக்கு எதிராக தன்னிச்சையாக செயல்படவில்லை. பாஜக தேசிய தலைமைக்கு இங்கு நடப்பது தெரியும் என நினைக்கிறேன். பாஜக மேலிடம் அழைத்தால் நிச்சயம் விளக்கம் அளிப்பேன். மேலிடம் அழைக்கும்போது, தமிழக பாஜகவில் நடப்பதை தெளிவாக தெரிவிப்பேன்." என்றார் காயத்ரி ரகுராம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9