Hindi imposition : இந்தி மொழி எந்த வகையிலும் திணிக்க கூடாது - முதல்வர்!
Oct 18, 2022, 01:15 PM IST
இந்திக்கு தாய்ப்பாலும் இந்தியாவின் மற்று மொழிகளுக்கு கள்ளிப்பால் புகட்ட நினைப்பது இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை 2ஆவது நாளாக இன்று கூடியது. அப்போது, சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது சபாநாயகர் அப்பாவு அவையின் மாண்பைக் கெடுக்காதீர்கள் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு எச்சரிக்கைவிடுத்தார்.
இதையடுத்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏ-க்கள் வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து சட்டப்பேரவை நிகழ்வுகளில் பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏ-க்கள் பங்கேற்க இன்று ஒரு நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து ஆறுமுகசாமி ஆணையத்தின் ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கை மற்றும் அருணா ஜெகதீசனின் தூத்துக்குடி துப்பாக்கி சூடு அறிக்கை ஆகியவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்ந்து இந்தி திணிப்புக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை தொடர்ந்து சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், "முழுக்க முழுக்க இந்திக்காகவே துடிக்கிறது அவர்களது இதயம். இந்தி தெரியாதவர்கள் ஒன்றிய அரசின் பணி பெற முடியாத வகையில் இந்தி மொழி திணிப்பு உள்ளது.
ஆங்கிலத்தை மொத்தமாக அகற்ற பாஜக அரசு முயற்சி. மேலாதிக்கம் செலுத்தும் மொழியாக இந்தியை மாற்றிக்கொண்டிருக்கின்றனர்; ஆங்கிலத்தை அகற்றுவதற்கு பின்னால் இந்தியை அமர வைக்கும் எண்ணம்தான் உள்ளது.
இந்திக்கு தாய்ப்பாலும் இந்தியாவின் மற்று மொழிகளுக்கு கள்ளிப்பால் புகட்ட நினைப்பது இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது. இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு பேராபத்தை விளைவிக்கக் கூடியது. மொழி என்பது நமது உயிராய் ,உணர்வாய், விழியாய், எதிர்காலமாய் இருக்கிறது. மொழி வளர்க்கவும் பிற மொழி ஆதிக்கத்திலிருந்து காக்கவுமே திமுக தோன்றியது.
இன்று வரை மொழி காப்பு இயக்கமாகவே இருந்து வருகிறது. 1938 ஆம் ஆண்டு முதல் இந்தி மொழி திணிப்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நாமும் எதிர்த்துக் கொண்டே இருக்கிறோம். ஆதிக்க சக்திகளும் விடுவதாக இல்லை. நாமும் விடுவதாக இல்லை. இது தமிழர் பண்பாட்டை காக்கும் போராட்டம். தமிழ்நாடின் மொழிக்கொள்கை என்பது, தமிழும் ஆங்கிலமும் என்ற இரு மொழிக்கொள்கையே.
தமிழ்மொழி உள்ளிட்ட மாநில ஆட்சி மொழிகள் அனைத்தும் இந்திய அரசின் ஆட்சி மொழியாக வேண்டும். இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தி மொழி எந்த வகையிலும் திணிக்க கூடாது. தமிழ்நாட்டிலே இயங்கும் ஒன்றிய அரசு அலுவலகங்களில் இணை அலுவல் மொழியாக தமிழை அங்கீகரிக்க வேண்டும் .சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு வழியாக தமிழ் மொழியாக வேண்டும்" என்றார்.
டாபிக்ஸ்