EPS Vs Duraimurugan: ’கர்நாடகாவிடம் பேசுவது தற்கொலைக்கு சமம்!’ ஈபிஎஸ்-துரைமுருகன் இடையே காரசார விவாதம்!
Oct 09, 2023, 02:07 PM IST
“காவிரி விவரகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ்- அவை முன்னவர் துரைமுருகன் இடையே காரசார விவாதம்”
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடியது. கேள்வி நேரம் நிறைவடந்த நிலையில் காவிரி விவகாரத்தில் தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார்.
பின்னர் முதல்வர் கொண்டு வந்த தனித்தீர்மானத்தின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார். கர்நாடக திறக்க வேண்டும் என தெரிவிக்கவில்லை; விவசாயிகள் பயிரிட்ட பயிர்கள் எல்லாம் கருகிப்போய்விட்டதே, அதற்கு யார் பொறுப்பு என கேள்வி எழுப்பினார்.
துரைமுருகன், அவை முன்னவர்: எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் முதல்வராக இருந்தவர், இந்த இலாகாவையும் பார்த்தவர். முதலமைச்சர் பெங்களூரு சென்றாரே அங்குள்ள முதல்வரோடு பேசக்கூடாதா என்று கேட்டார். இதைத்தான் அவர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள். பேசினால் என்ன ஆகும் என்பது உங்களுக்கு தெரியும். பல ஆண்டுகாலம் பேசி பேசி பார்த்து முடியாத காரணத்தால்தான் நாம் நீதிமன்றத்திற்கு போனோம். நீதிமன்றத்திற்கு சென்ற பிறகு கர்நாடகத்தில் பேசி தீர்த்துக் கொள்கிறோம் என்றார்கள், இப்போதும் அதைத்தான் சொல்கிறார்கள்.
நாம் உச்சநீதிமன்றம் சென்றால் நாங்கள் பேசித்தீர்த்துக் கொள்கிறோம் என்று கர்நாடக சொல்வார்கள், நீதிபதிகளும் நீங்களே பேசிக்கொள்ளுங்கள் என்று வழக்கை தள்ளுபடி செய்து விடுவார்கள்.
ஆகையால் இது தற்கொலை செய்து கொள்வதற்கு சமம் “”
எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர்:- தற்கொலைக்கு சமம் என்று சொல்லும் வார்த்தை சரியான வார்த்தை இல்லை; அப்படி பட்ட கட்சியோடு ஏன் கூட்டணி வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
துரைமுருகன், அவை முன்னவர்: இந்தியா கூட்டணியில் அணி சேர்வது நமது கொள்கையை விட்டுவிட்டு சேர்வது அல்ல; பாஜகவை ஆட்சியில் இருந்து எடுப்பதுதான் அக்கூட்டணியின் நோக்கம்.