Extreme Heavy Rain: கலகலத்து போன காயல்பட்டினம்! ஒரே நாளில் 93 செ.மீ மழை பதிவு!
Dec 18, 2023, 07:31 AM IST
”Extreme Heavy Rain: கடந்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் அதி கனமழை பெய்துள்ளது”
தென் மாவட்டங்களில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக காயல்பட்டினம் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 93 செ.மீ மழை கொட்டித் தீர்த்து உள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தென் மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.
குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று முதல் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் விடிய விடிய தொடர் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில், தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 93 செ.மீ மழை பதிவாகி உள்ளது. திருச்செந்தூரில் 68 செ.மீ, ஸ்ரீவைகுண்டத்தில் 61 செ.மீ, கோவில்பட்டி 50 செ.மீ, சாத்தான்குளம் - 46 செ.மீ, தூத்துக்குடி 36 செ.மீ மழை பதிவாகி உள்ளது. ஒட்டுமொத்தமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு 35 செ.மீ ஆக உள்ளது. மேலும் தாமிரபரணி ஆற்றில் ஒரு லட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
தொடர் மழையால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இன்று அரசு பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.