தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  முதன்முதலில் மே தினம் கொண்டாடிய சிங்காரவேலரை பற்றி தெரியுமா?

முதன்முதலில் மே தினம் கொண்டாடிய சிங்காரவேலரை பற்றி தெரியுமா?

Karthikeyan S HT Tamil

Feb 11, 2023, 06:23 PM IST

google News
Singaravelar Memorial Day: சிந்தனை சிற்பி ம.சிங்காரவேலரின் 77வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. (Image Credits: SF Bank Ltd)
Singaravelar Memorial Day: சிந்தனை சிற்பி ம.சிங்காரவேலரின் 77வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

Singaravelar Memorial Day: சிந்தனை சிற்பி ம.சிங்காரவேலரின் 77வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

தென்னகத்தின் முதல் பொதுவுடைமைவாதி ம.சிங்காரவேலரின் 77வது நினைவு தினம் இன்று (பிப்.11). இந்நாளில் அவரை நினைவு கூறுவது நமது கடைமை. யார் இந்த சிங்காரவேலர்?, சிங்காரவேலர் ஆற்றிய சமூகப் பணிகள் என்ன என்பதை இந்த தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.

ம.சிங்காரவேலர் நினைவு தினம் இன்று!

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பொதுவுடைமைவாதி, தொழிற்சங்கவாதி, விடுதலை போராட்ட வீரர், வியத்தகு சிந்தனைகள் கொண்டவர் என பல பரிமாணங்களை கொண்டவர் ம.சிங்காரவேலர். 1860 ஆம் ஆண்டு பிப்ரவரி 18-ல் சென்னையில் உள்ள அயோத்திகுப்பத்தில் ஒரு மீனவ குடும்பத்தில் பிறந்தார். பொதுவுடைமை சிந்தனைகளை தமிழகத்தில் பரப்ப இவர் ஆற்றிய பணிகளுக்காக சிந்தனை சிற்பி சிங்காரவேலர் எனும் சிறப்பு பெயராக மாறியது.

மார்க்சிய சிந்தனைகளை சூழலுக்கு ஏற்ப மாற்றி அதற்கு செயல்வடிவம் கொடுத்தவர் ம.சிங்காரவேலர். அன்றைய சாதிக் கட்டுப்பாடுகளையும் சமூக அமைப்புகளையும் உடைத்தெறிந்துவிட்டு, சிங்காரவேலர் சென்னை திருவல்லிக்கேணியிலுள்ள இந்து உயர்நிலைப் பள்ளியில் தம் பள்ளிப் படிப்பையும், 1894ஆம் ஆண்டில் சென்னை மாநிலக் கல்லூரியில் படித்துப் பி.ஏ.பட்டமும் பெற்றதுடன், சில ஆண்டுகளுக்கு பின்னர் சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று, பி.எல். (B.L.) பட்டமும் பெற்றார் என்பது மிகப் பெரிய சாதனையாகும்.

1918-ல் சென்னை தொழிலாளர் சங்கத்தை துவங்கியவர் ம.சிங்காரவேலர். இதுவே இந்தியாவின் முதல் தொழிற்சங்கம். காந்திய சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட சிங்காரவேலர், கிராமம் கிராமமாக சென்று ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வியறிவு பெற உழைத்தார்.

சுயமரியாதை இயக்கமும், பொதுவுடைமை இயக்கமும் ஒன்றாக செயல்பட வேண்டும் என விரும்பினார் சிங்காரவேலர். அதனாலேயே பெரியாரின் சிந்தனைகளுக்கு தனது ஆதரவை கொடுத்தார். பிரபஞ்ச பிரச்னைகள், மூட நம்பிக்கைகளின் கொடுமை, மனிதனும் பிரபஞ்சமும், பகுத்தறிவு என்றால் என்ன?, விஞ்ஞானத்தின் அவசியம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியிருக்கிறார்.

மீனவ குடும்பத்தில் பிறந்து தன் இனமக்களுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்காகவும், சமூக அநீதிகளைக் குறிப்பாகத் தீண்டாமைக் கொடுமைகளை எதிர்க்க பாடுபட்டவர் ம.சிங்காரவேலர்.

உலகம் முழுவதும் தொழிலாளர்களால் கொண்டாடப்படும் மே நாள் (தொழிலாளர் தினம்), இந்தியாவில் முதன்முதலாக 1923ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தின் எதிரில் இருந்த கடற்கரையில் சிங்காரவேலரால் கொண்டாடப்பட்டது.

தேசபக்தி, பொதுவுடைமை, மனிதாபிமானம், தென்னகத்தின் முதல் பொதுவுடைமைவாதி, முதன்முதலாக மே நாளைக் கொண்டாடியவர், சுயமரியாதை இயக்கச் சிந்தனையாளர் என்ற பன்முக ஆளுமை கொண்ட ம.சிங்காரவேலர் சிறந்த விடுதலை போராட்ட வீரரும் ஆவார். 

ஆனால், இந்தியா விடுதலை பெறுவதைப் பார்க்கும் அதிர்ஷ்டத்தை காலம் அவருக்கு வழங்கவில்லை. இந்தியா சுதந்திர காற்றை சுவாசித்துக்கொண்டிருக்கும் போது ஒரு ஆண்டுக்கு முன்பாக, அதாவது 1946 ஆம் ஆண்டு இதே பிப்ரவரி 11ம் தேதி இறந்தார். அவர் மறைந்து இத்தனை ஆண்டுகள் ஆனாலும் என்றைக்கும் மனித குல வளர்ச்சிக்கு தேவையான பொதுவுடைமை சிந்தனை விதைகளை விதைத்துவிட்டு போனவர் ம.சிங்காரவேலர்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி