palm seeds: ராணிப்பேட்டையில் 5 மணி நேரத்தில் 52 லட்சம் பனை விதைகள் நட்டு சாதனை
Oct 03, 2022, 07:37 PM IST
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 288 ஊராட்சிகளில் காலை 8 மணிக்கு தொடங்கிய பனை விதைகளை நடும் பணி பிற்பகல் 1 மணிக்கு நிறைவுபெற்றது.
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 288 ஊராட்சிகளில் 5 மணி நேரத்தில் 52 லட்சம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டு உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், மண் அரிப்பை தடுக்கும் வகையிலும், பனை மரங்களின் பரப்பை அதிகரிக்கும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 5 மணி நேரத்தில் 50 லட்சம் பனை விதைகள் நடும் சாதனை முயற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள 288 ஊராட்சிகள் உதவியோடு அந்தந்த பகுதிகளில் சேகரிக்கப்பட்டு சுமார் 50 லட்சத்துக்கும் அதிகமான பனை விதைகளை நடவு செய்யும் பணி இன்று (அக்.03) காலை 8 மணியளவில் துவங்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை வட்டம் ஆரூர் ஊராட்சி கன்னிகாபுரம் கிராமத்தில் உள்ள தரிசு நிலத்தில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பனை விதை நட்டு துவக்கி வைத்தார். இதையடுத்து வாலாஜா வட்டம் தென்கடப்பந்தாங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட குளக்கரையில் பனை விதைகளை நடும் பணியை கைத்தறி மற்றும் நுணிநூல் துறை அமைச்சா் ஆர்.காந்தி துவக்கி வைத்தார்.
ஏரிக்கரைகள், குளங்கள், ஆற்றங்கரை, பொது இடங்கள், அரசுக்கு சொந்தமான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பனை விதைகள் நடப்பட்டன. 288 ஊராட்சிகளில் காலை 8 மணிக்கு தொடங்கிய பனை விதைகளை நடும் பணி பிற்பகல் 1 மணிக்கு நிறைவுபெற்றது. 52 லட்சம் பனை விதைகள் நடப்பட்டு உலக சாதனை பட்டியிலிலும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சாதனை நிகழ்வில் மக்கள் பிரதிநிதிகள், மாவட்டத்தின் அனைத்து துறை அதிகாரிகள், நூறுநாள் வேலை திட்டப் பணியாளர்கள், பொதுமக்கள், மாணவர்கள், தன்னார்வலர்களும் பங்கேற்று பனை விதைகளை நட்டனா்.