Jallikattu 2024: மது போதையில் மாடுபிடிக்க முயற்சி! 4 பேரை தூக்கி அடித்த ஜல்லிக்கட்டு குழு! பாலமேட்டில் பரபரப்பு!
Jan 16, 2024, 08:51 AM IST
”பாலமேடு ஜல்லிக்கட்டில் 1000 காளைகளும், 700 வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர்”
மது அருந்திவிட்டு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க முயன்றதாக 4 வீரர்கள் உட்பட 7 பேரை தகுதி நீக்கம் செய்து பாலமேடு ஜல்லிக்கட்டு குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
பொங்கல் திருநாளையொட்டி மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்து முடிந்த நிலையில் பாலமேட்டில் இன்றும், அலங்காநல்லூரில் நாளையும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.
பாலமேட்டில் உள்ள மஞ்சமலையாற்றில் அமைக்கப்பட்டுள்ள வாடிவாசலில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் உறுதி மொழி விழா நடைபெற்ற நிலையில் அமைச்சர் மூர்த்தி பச்சை கொடி காட்டி ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
சிறந்த மாடுபிடி வீரருக்கு ஒரு காரும், சிறந்த மாட்டின் உரிமையாளர்களுக்கு ஒரு காரும் வழங்கப்படுகிறது. மேலும் இருசக்கர வாகனங்கள், சைக்கிள்கள், பசு கன்றுகள், பிரோ, கட்டில், மெத்தை, தங்கக்காசுகள், பட்டுப்புடவைகள் உள்ளிட்ட பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இன்றைய பாலமேடு ஜல்லிக்கட்டில் 1000 காளைகளும், 700 வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர். அசம்பாவிதங்களை தவிர்க்க 2000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
விளையாடும் வீரர்களுக்கும், காளைகளுக்கும் காயம் ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்க மருத்துவக் குழு தயார் நிலையில் உள்ளது. அதே போல் கால்நடைகளுக்காகவும், வீரர்களுக்காகவும் தனித்தனி ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன.
முதல் சுற்று போட்டிகள் நிறைவுற்ற நிலையில் இரண்டாம் சுற்று போட்டிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் இதற்காக நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையின்போது 4 வீரர்கள் மது அருந்தி இருப்பது தெரிய வந்ததால் அவர்கள் உடனடியாக தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். மேலும், உடலில் காயம் மற்றும் உடல் எடை குறைவு உள்ளிட்ட காரணங்களால் மேலும் 3 வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பதில் வேறு வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் எந்த உயிரிழப்பும் ஏற்படாத நிலையில், இன்றைய தினமும் இதே போன்ற எந்த உயிரிழப்புகளும் இல்லாமல் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த திட்டமிடப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
டாபிக்ஸ்