31 Years of Annamalai: நட்புக்கு இலக்கணம்! நண்பர்களை பிரிக்க சூழ்ச்சி! சவாலை மட்டுமல்ல மக்களின் மனதையும் வென்ற அண்ணாமலை!
Jun 27, 2023, 08:46 AM IST
31 Years of Annamalai : அண்ணாமலை, 1992ம் ஆண்டு ஜீன் 27ம் தேதி வெளியான தமிழ் திரைப்படம். ரஜினிகாந்த், குஷ்பூ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். வெளியான ஆண்டு நல்ல ஹிட்டான திரைப்படம் அண்ணாமலை. வெளியாகி 31 ஆண்டுகள் ஆனாலும், நீங்காமல் சினிமா ரசிகர்கள் மனதில் நிலைத்திருக்கும் திரைப்படம்.
பணக்காரரான சரத்பாபுவுக்கும், ரஜினிகாந்துக்கு ஒரு பிரச்னை ஏற்பட்டு, அதில் இருந்து அவர்கள் நண்பர்களாகியிருப்பார்கள். இருவரும் உயிர் நண்பர்களாக இருப்பார்கள். ரஜினி ஏழையாக பசு மாடுகளை பராமரித்து, பால் விற்கும் தொழில் செய்து வருவார். ரஜினியுடன் நட்பில் இருப்பது சரத்குமாரின் தந்தை ராதாரவிக்கு பிடிக்காது. எனவே அவர்களை பிரிக்க முயற்சி செய்வார். அது நடக்காது. அதற்காக ஒரு சூழ்ச்சி செய்வார். சென்னையின் முக்கிய இடத்தில் ரஜினிகாந்துக்கு இடம் இருக்கும். அந்த இடத்தை சூழ்ச்சி செய்து பறிக்க முயல்வார் ராதாரவி.
இதனால் சரத்பாபு - ரஜினிகாந்த் நட்பில் பிரிவு ஏற்படும். அது ராதாரவிக்கு கொண்டாட்டமாக இருக்கும். ரஜினி காந்த், சரத்பாபுவிடம் சவால்விட்டு அவருக்கு இணையான பணக்காரராக முன்னேறுவார். இருவரும் தாங்கள் விரும்பிய பெண்ணை திருமணம் செய்துகொண்டு வாழ்வார்கள். அவர்களின் குழந்தைகள் இருவரும் காதலிப்பார்கள். தங்கள் குழந்தைகளின் காதலை சேர்த்து வைப்பதற்காக பிரிந்த நட்பு சேருமா என்பதே கிளைமேக்ஸ்.
படத்தில் ரஜினிகாந்த், குஷ்பூ, சரத்பாபு, ராதாரவி தவிர, ரேகா, ஜனகராஜ், நிழல்கள் ரவி, வினு சக்ரவர்த்தி, மனோரமா, வைஷ்ணவி, கரண் உள்ளிட்ட பலர் நடித்திருப்பார்கள். இந்தப்படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா, பாலச்சந்தர் புரொடக்ஷ்ன்ஸ் நிறுவனம் வசந்த இயக்குவார் என்று அறிவித்திருந்தது. ஆனால் படத்தை எழுதி, இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா.
தேவாவின் இசையில் அனைத்து பாடல்களும் ஹிட், 90களின் இசையை தேவா ஆண்ட காலம் அது என்றே கூறலாம். வந்தேண்டா பால்காரன் பாடல் அந்த காலத்தில் பட்டி, தொட்டியெல்லாம் ஒலித்த பாடல். அதைத்தவிர கொண்டையில் தாழம்பூ, ஒரு பெண் புறா, ரெக்க கட்டி பறக்குதடி அண்ணாமல சைக்கிள், வெற்றி நிச்சயம் ஆகிய பாடல்கள் அனைத்துமே படு ஹிட்டானது. பாடல்கள் மட்டுமல்ல படமும் ஹிட்.
படத்தில் குறிப்பிட்டு கூற வேண்டிய விஷயமே குஷ்பூதான், வெளியூரில் இருந்த வந்து தங்கும் குஷ்பூவுக்கு ரஜினிகாந்த் மீது காதல் ஏற்பட்டுவிடும். அப்போது கலகல குஷ்பூவாக நடித்திருப்பார். படத்தின் பின் பாதியில் ஒரு நல்ல குடும்பத்தலைவியாக, ஒரு பருவ வயது பெண்ணின் தாயாக என பாந்தமாக நடப்பின் இரு பரிமாணங்களிலும் கலக்கியிருப்பார்.
ரஜினிகாந்தின் தாயாக மனோரமா, வழக்கம்போல் சிறப்பான நடிப்பில் கலக்கியிருப்பார். ராதாரவி, நிழல்கள் வில்லன்கள் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள். சார்மிங் சரத்பாபு, பணக்கார இளைஞன், பாசமிகு நண்பன் என்று தரமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். ரஜினிக்கு ரசிகர் பட்டாளைத்தை குவித்த படங்களுள் இதுவும் ஒன்று.
அப்போதெல்லாம் ரஜினி படங்களில் பஞ்ச் டயலாக்கை பேசுவார். இந்தப்படத்தில் மலடா அண்ணாமல என்ற பஞ்ச் டயலாக்கை பேசி ரசிகர்களின் மனதை கவர்ந்திருப்பார்.
அந்தப்படம் வெளியாகி 31 ஆண்டுகள் ஆகிறது. நட்பு, காதல், சவால் என பரபரப்பான அண்ணாமலை படம் இன்னமும் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த படமாகும்.
டாபிக்ஸ்