Marakkanam: கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் பலி.. சாலையை மறித்து கதறும் உறவினர்கள்!
May 14, 2023, 12:00 PM IST
Spurious Liquor: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் பகுதியில் நேற்று ஏராளமானோர் கள்ளச்சாராயம் அருந்தி இருக்கிறார்கள். இதில் 16 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. கள்ளச்சாராயம் அருந்திய 6 பேர் மயக்கமடைந்த நிலையில் நேற்றிரவு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எக்கியார் குப்பத்திற்கு விரைந்த போலீசார் பாதிக்கப்பட்ட மேலும் 10 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த நிலையில் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுரேஷ், சங்கர், தரணிவேல் ஆகிய 3 பேர் சிகிச்சை பலனின்றி பலியானார்கள். மேலும், முண்டியம்பாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் 13 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே கள்ளச்சாரயம் அருந்தி 3 பேர் பலியான சம்பவத்தில் கள்ளச்சாராய வியாபாரி அமரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் மரக்காணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டாஸ்மாக் மதுவை விட கள்ளச்சாராயத்தின் விலை குறைவு என்பதால் இப்பகுதியில் கள்ளச்சாராயம் வாங்கிக் குடிப்போர் அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், கள்ளச்சாராயம் குடித்த வேறு யாரும் இருந்தால் அவர்களே தாமாக முன்வந்து மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என விழுப்புரம் மாவட்ட சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. இச்சம்பவம் குறித்து விழுப்புரம் எஸ்.பி ஸ்ரீநாதா விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
இந்நிலையில், கள்ளச்சாராய விற்பனையை முழுமையாக நிறுத்தக் கோரி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொது மக்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளச்சாராயம், எரிசாராயம் ஆகியவை தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், கள்ளச்சாராயம் அருந்தி 3 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்