Child Marriage : கடந்த 11 மாதங்களில் 255 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்!
Nov 20, 2022, 09:18 AM IST
குழந்தை திருமணங்கள் அதிகரித்துவரும் நிலையில் கடந்த 11 மாதங்களில் 255 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
குழந்தை திருமணங்கள் என்பது கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருகிறது. இந்த குழந்தைத் திருமணத்துக்கு முக்கிய காரணமாக கூறப்படுவது வறுமை, போதிய கல்வியறிவு இல்லாமை, பெண் குழந்தைகளை குடும்ப சுமையாகக் கருதுவது போன்றவைதான். குறிப்பாக கொரோனா காலத்தில் பள்ளி செல்லும் சிறுமிகள் பலருக்கும் குழந்தை திருமணம் நடைப்பெற்றுள்ளது.
2021 ஆம் ஆண்டு கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பள்ளி மாணவர்கள் வீட்டில் இருந்தே கல்வி கற்க அறிவுறுத்தினர். பின்னர் தொற்று குறைந்த நிலையில் மீண்டும் பள்ளி திறக்கப்பட்டது. ஆனால் பள்ளிகளில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பள்ளிக்கு வரவில்லை எனபது ஒரு அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்தது.
இதனால் பள்ளி கல்வித்துறை மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்கும் வகையில் மாணவர்களை தொடர்பு கொள்ள முயன்ற போது தான் இந்த அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியானது. இந்த கொரோனா காலத்தில் பள்ளி செல்லும் மாணவர்களுக்கு அவர்களது பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளதே இந்த இடைநிற்றலுக்கு காரணம் என்பது தெரியவந்தது.
தமிழகத்தில் மட்டும் 511 மாணவிகளுக்கு குழந்தை திருமணம் நடைப்பெற்றுள்ளது. 8 ஆம் வகுப்பு பயிலும் சிறுமிகளுக்கும் இதில் அடங்குவர். இந்த குழந்தை திருமணம் அதிகமாக கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை,விழுப்புரம், விருதுநகர் மாவட்டங்களில் நடந்துள்ளதாக பள்ளிகல்வி துறை தெரிவித்தது.
குழந்தைத் திருமணங்கள் எங்கு நடைபெற்றாலும், அந்த இடத்திற்கு சமூகநலத் துறை அதிகாரிகள் விரைந்து சென்று பெற்றோர்களுக்கு அறிவுரைகள் கூறி, குழந்தைத் திருமணத்தை தடுத்து நிறுத்தி வருகின்றனர்.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரை 83 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் நவம்பர் வரையில் 37 குழந்தை திருமணங்களும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 107 குழந்தை திருமணங்களும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 28 குழந்தை திருமணங்களும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 4 மாவட்டங்களில் 255 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
குழந்தைத் திருமணத்தைத் தடுக்க வேண்டுமெனில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
டாபிக்ஸ்