2024 Pongal Special: மகர சங்கராந்தி என அழைக்கப்படுவது ஏன்?
Jan 15, 2024, 06:20 AM IST
பொங்கல் என்பது பொங்கு என்பதிலிருந்து வந்தது. மகிழ்ச்சி,ஆனந்தம்,வளம்,செழிப்பு போன்ற,எல்லா நலன்களும், உள்ளத்திலும் இல்லத்திலும் பொங்க வேண்டும்.
"ஞாயிறு போற்றுதும்
ஞாயிறு போற்றுதும்"
என சிலப்பதிகாரம், சங்ககாலம் முதற்கொண்டே, சூரியன் வழிபாடு இருந்திருப்பதை தெரிவிக்கிறது. பிரபஞ்சம் இயங்குவதற்குக் காரணம் சூரியன். சூரிய ஆற்றலால் விளைந்த பயிர்களை அறுவடை செய்து, அதனை சகல தேவதைகளின் வடிவமான, சூரியனுக்கே படைத்து வழிபடும் அறுவடைத் திருவிழாதான் பொங்கல் திருநாள். இதுபற்றி, கலித்தொகை, " தையில் நீராடி, தவம் தலைப்படுவாயோ" எனக் கூறி சிறப்பிக்கும்.
"உலகின் இருள் போக்கி, ஆத்ம பலம் தரும் ஒளி சக்தியை நமஸ்கரிப்போம்" என ரிக்வேதம் போற்றும்.
சூரியனை வழிபடுவதற்குப் பெயர் "சவுரம்". இந்த வழிபாட்டில்,சூரியனைத் தவிர, மற்ற தெய்வத்தைத் கண்களால் காண முடியாது, காணப்படும் சூரியன் ஆலயங்களில் பரிவார தெய்வமாக உள்ளது. சூரியனை வழிபடுவோர் அனைவரும்,நேர்மை தவறாது ஆட்சி செய்து, உண்மையே பேசி,தர்ம வழியில் வாழ்ந்த ,சூர்ய குல மன்னர்களின் நல் ஆசிகளையும் பெறுவர்.
நெல் அறுவடை செய்து, மிக்க மகிழ்ச்சியுடன் இருக்கும்,விவசாயப் பெருமக்கள், தமக்குத் துணை நின்ற ,சூரியன், மாடு,பணிக்கு உதவியோர் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் ஒரு பாரம்பர்ய திருவிழா இது. முதல் நாள் சூரியனுக்கு, உரிய தைப் பொங்கல் நாள் அடுத்து கால் நடைகளுக்கு மாட்டுப் பொங்கலும், நம் உறவின் முறைகள்,நண்பர் குழாம், தெரிந்தவர்கள் போன்றோரைப் போற்றி, விருந்தோம்பல் செய்து, உறவுகள் பலப்பட காணும் பொங்கலும் கொண்டாடப்படுகின்றது.
பொங்கல் என்பது பொங்கு என்பதிலிருந்து வந்தது. மகிழ்ச்சி,ஆனந்தம்,வளம்,செழிப்பு போன்ற,எல்லா நலன்களும், உள்ளத்திலும் இல்லத்திலும் பொங்க வேண்டும் என்பதற்காகவே பானை பொங்கும் போது, "பொங்கலோ பொங்கல்" என சப்தமிடுகிறோம். சிலர் குலவையிடுவதும் உண்டு.
கால் நடைகளுக்கு பொங்கலிட்டு, நன்றி செலுத்துகிறோம். மூன்றாம் நாளில் ஜல்லிக்கட்டு ,மஞ்சு விரட்டு போன்ற வீர விளையாட்டுகள் நடைபெறும். போகிப் பண்டிகை என்பது நமது பாரம்பரியம், பண்பாடுகளை இழக்காது, ஒழுக்கத்தை மையமாகக் கொண்டு, பழமையை விடுத்து மனிதன் புதுமைக்குள் புக வேண்டும் என்பதை உணர்த்தும் உன்னத விழா இது. உள்ளத்தில் நல்ல சிந்தனைகள் வளர போகி வழி வகுக்கிறது.
"பழையன கழிதலும்
புதியன புகுதலும்"
என்பதற்கு இதுவே பொருள்.,
காப்புக் கட்டுவது என்பது, வெள்ளயடித்த, வீட்டின் தலைவாயிலில் , வேப்பிலை, ஆவாரம் பூ, அருகம் புல், மாவிலைத் தோரணம் கட்டி புதுத்தானியங்களை புதுப் பானை அடுப்பிலேற்றி, பானை நிறைய பால் வார்த்து, பால் பொங்கி வருகையில், புத்தரிசியிட்டு,சர்க்கரை கலந்து, இனிப்பான பொங்கலை சூரியனுக்கு படையல் போட்டுப் பிறகு சுற்றமும், நட்பும் சூழ உண்டு மகிழும் பெருவிழா இது.
பல நாடுகளிலும் இவ்விழா கொண்டாடப்படுகிறது. சூரியன்,தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கும் தினமிதை, மகர சங்கராந்தி எனவும் கொண்டாடுகின்றனர். இதன் துவக்கத்திலிருந்துதான் சூரியன் வடதிசையில் உள்ள ஊர்த்துவ லோகத்தில் வசிப்பவர்களுக்கு இருள் எனும் அஞ்ஞானம் போக்கி, வெளிச்சம் எனும் ஞானம் அளித்து சஞ்சரிக்கிறார். இதை உத்தராயண புண்ணிய காலம் என்பர். பிதாமகர் பீஷ்மர், இக்கால வரம்பு வரும்வரை இருந்து பின்னரே மரணமடைந்தார் என்கிறது மஹாபாரதம்.
"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்..." எனவும்
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் எனவும் போற்றிக் கொண்டாடப்படுகிற பொங்கல் விழா, சான்றுகள் இல்லாத செவி வழிச் செய்தியாக, சில புராணக் கதைகளையும், தொடர்புப் படுத்துகிறது.
"ஸப்தாஹ மஹாத்மியம்" என்று சொல்லப்படும், ஸ்ரீ மத் பாகவத புராணத்தின், பத்தாவது ஸ்கந்தம், முதல் பாகம், நந்தலாலாவில், வருகிற கோவர்தன பூஜை நிகழ்வினை தொடர்பு படுத்தி, இந்திரனுக்கு பாடம் கற்பிக்க வேண்டி, அவருக்கு உரிய யாகம் ஸ்ரீ கிருஷ்ணரால் தடுக்கப்பட்டு, விவசாயம், வணிகம், பசு, சூரியன், மலை போன்ற இயற்கை விஷயங்கள் பூஜைக்கு ஏற்றவையாக ஆகிவிட, இந்திரன் மழை பொழிய வைத்து துன்புறுத்த, ஸ்ரீ கிருஷ்ணர், கோவர்தன மலையை தூக்கிப் பிடித்து அனைவரையும் காக்க, பின் இந்திரன் உணர, ஆதவன் வெளிவர, தேவரிஷிகள் கிருஷ்ணரை ஆகாச கங்கையில் அபிஷேகம் செய்து "கோவிந்தன்" என பெயர் சூட்டி விழா எடுத்த நாளை தொடர்புபடுத்துவர்.
மற்றோர் செவிவழி செய்தியாக, பாவை நோன்பு, தை நீராடல் என சங்க காலத்தில் அழைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இவ்விழா, சிவபெருமானையும், நந்தியையும் தொடர்புப் படுத்தி, சிவன் ஒருசமயம் நந்தியிடம், மக்களுக்கு சில நெறிகள் போதிக்கும் விதமாக, விஷயம் சொல்லி அனுப்ப, நந்தியோ அதை மாற்றிச் சொல்லி, உணவு பற்றாக்குறைக்கு வழி செய்துவிட, அன்று முதல், காளை, மனிதர்களின் வயலில் வேலை செய்யவும், வேறு உதவிகள் செய்யவும் பணிக்கப்பட்டு, அவைகளை நன்கு பேணுபவர்களை, வருடம் ஒரு முறை, ஈசனே நேரில் வந்து ஆசி கூறுகிறார் எனவும், அஃதே மாட்டுப் பொங்கலின் சிறப்பு என்கிறது இந்த உறுதி செய்யப்படாத செவிவழி செய்தி.
எப்படியோ,காலங்காலமாக கொண்டாடப்பட்டு வரும் பொங்கல் விழா, ஒரு தமிழர் திருநாள் என்பதில் ஐயமில்லை.
"தை பொங்கலும் வந்தது
பாலும் பொங்குது
பாட்டு சொல்லடியோ-
வண்ண மங்கையர்
ஆடிடும் மகாநதியை
போற்றி சொல்லடியோ"
என மகிழ்வுடன் பாடி, ஆடி, இறைவனை வணங்கித் தைப் பொங்கலைக் கொண்டாடி மகிழ்வோம்.
கி.சுப்பிரமணியன்,
ஆன்மிக எழுத்தாளர்,
அடையார், சென்னை.
தொடர்புக்கு: manivks47@gmail.com
பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.
டாபிக்ஸ்