Palani Temple: பழனி கும்பாபிஷேகம்; நேரில் காண இத்தனை பேருக்கு மட்டுமே அனுமதி!
Jan 23, 2023, 04:37 PM IST
Palani Murugan Temple Kumbabhishekam: பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள 51,000 பேர் இணையதளத்தில் விண்ணப்பித்திருந்த நிலையில், 2000 ஆயிரம் பக்தர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கும் பணி துவங்கியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில் திருவிழாக்களுக்கு பெயர் பெற்றதாகும். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூசம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம் ஆகிய திருவிழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்நிலையில், பழனியில் உள்ள முருகன் கோயிலில் வருகிற 27 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பூஜைகள் ஜனவரி 18-ல் துவங்கின. நேற்று பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்து கோயில் அர்ச்சககர் ஸ்தானிகர்கள் தீர்த்தம் எடுத்து வந்தனர். மாலை வழிபாடு நடந்தன.
இன்று காலை 6 மணிக்கு பாத விநாயகர் கோயில் முதல் உட்பிரகார தெய்வங்களின் அருட் சக்தியை திருக்குடங்களில் எழுந்தருள செய்தல், சூரிய ஒளியில் இருந்து நெருப்பு எடுத்து வேள்விச் சாலைக்கு தீயிடல் நடைபெற்றது.
16 ஆண்டுகளுக்கு பிறகு மலைக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படும் சூழலில், கோயிலுக்கு அதிகளவிலான பக்தர்கள் கூடுவதை தவிர்க்கும் விதமாக திருக்கோயில் நிர்வாகம் சார்பில் ஆறாயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
இதில், நான்காயிரம் பேர் நன்கொடையாளர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் நிர்வாக ரீதியிலான அதிகாரிகள் ஆகியோரும் மீதமுள்ள இரண்டாயிரம் பேர் பொதுமக்களும் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பம் தெரிவித்து 51ஆயிரம் பக்தர்கள் இணையவழியில் பதிவுசெய்தனர். இவர்களில் இரண்டாயிரம் பேர் கடந்த 21 ஆம் தேதி குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்களுக்கு கும்பாபிஷேக விழாவுக்கு செல்வதற்கான நுழைவுச்சீட்டு வழங்கும் பணி துவங்கியுள்ளது.
தேர்வான பக்தர்கள் தங்களது அசல் ஆதார் அட்டையை நேரில் காண்பித்து ஹாலோகிராம் பொருத்திய நுழைவுச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம். இதையடுத்து இன்று காலை 10 மணியளவில் தேர்வான பக்தர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பழனி தேவஸ்தான வேலவன் விடுதியில் பெற்று வருகின்றனர். அனுமதி அட்டை இன்றும், நாளையும் வழங்கப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அனுமதி அட்டையை வாங்கிச் செல்கின்றனர்.
முன்னதாக, பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகப் பணிகளை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, எம்.எல்.ஏ செந்தில்குமார் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்; மின் நிலுவை ரயிலில் பொருத்தப்படவுள்ள நவீன பெட்டிகளையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.
டாபிக்ஸ்