2 Years Of DMK Govt: அடாது துரத்தும் சர்ச்சை … விடாது பேசி சிக்கிய டாப் 5 அமைச்சர்கள்!
May 07, 2023, 07:15 AM IST
’திராவிட மாடல்’ ஆட்சியில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களின் இத்தகைய பேச்சுக்குகள் தொடர்ந்தால் பேசி ஆட்சியை பிடித்த இயக்கம் பேச்சாலேயே ஆட்சியை இழந்த வரலாற்றை காலம் ஏற்படுத்தி செல்லும் என்பது நிதர்சனமான உண்மை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பொறுப்பேற்று இன்றுடன் இரண்டு ஆண்டுகளை கடந்து மூன்றாம் ஆண்டில் அடியெத்து வைக்கிறது.
சமூகவலைத்தளங்கள் வளர்ந்துள்ள இந்த காலத்தில் திமுக அமைச்சர்களின் சர்ச்சை பேச்சுக்கு முதலமைச்சரின் தூக்கத்தை கெடுக்கும் அளவுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் சிக்கல்களை கொடுத்துள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில் டெரர் அமைச்சர்களாக அறியப்பட்டவர்களை கூட காமெடி மெட்டீரியல்களாக மாற்றிய பெருமை இந்த சமூகவலைத்தளங்களுக்கு உண்டு.
முதலமைச்சரின் தூக்கத்தை கெடுத்த சர்ச்சை பேச்சுக்கள்
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த திமுக பொதுக்குழுவில் ”ஒருபக்கம் திமுக தலைவர், இன்னொரு பக்கம் தமிழ்நாடு முதலமைச்சர். மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பது போல் உள்ளது என் நிலைமை, இந்த சூழலில் என்னை துன்பபடுத்துவது போல் கழக நிர்வாகிகளோ, மூத்தவர்களோ, மூத்த அமைச்சர்களோ நடந்து கொண்டால் நான் என்ன சொல்வது? இது சில நேரங்களில் தூங்கவிடாமல் கூட ஆக்கிவிடுகிறது” என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வேதனை பேச்சே ’திராவிட மாடல் ஆட்சிக்கு அமைச்சர்கள் எவ்வுளவு தொந்தரவுகளை கொடுத்துள்ளார்கள் என்பதை அறிய முடியும்.
கடந்த 2 ஆண்டுகளில் தங்களது பேச்சின் காரணமாக சர்ச்சைகளில் சிக்கிய டாப் 5 அமைச்சர்கள் இதோ...!
5.அமைச்சர் கே.என்.நேரு, நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல்கள் துறை அமைச்சர்
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி திருச்சியில் தனியார் ஐ.ஏ.எஸ் அகாடமி நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, விழாவுக்கு வந்த டிஎஸ்பி பரவாசசுதேவனை பாராட்டினார். ”எங்களோடு வந்த அவர் நினைத்தால் யாரையும் குற்றவாளியாக ஆக்குவார்” என்றார். அதற்கு மேல் அதை பற்றி சொல்ல விரும்பவில்லை என்ற அவரது பேச்சே அனைத்து கேள்விகளுக்கும் காரணமாய் அமைந்தது.
4.போக்குவரத்துதுறை அமைச்சர் ராஜகண்ணப்பன்
கடந்த ஆண்டு மார்ச் 29ஆம் தேதி ராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதுகுளத்தூர் ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் கூறுகையில் "நேற்று முன்தினம் காலை 9.30 மணிக்கு சிவகங்கையில் உள்ள அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் இல்லத்துக்கு, நானும் எனது நண்பருமான பிடிஓ அன்புக்கண்ணனும் சென்றோம். அமைச்சரின் இல்லத்துக்குச் சென்றவுடன், அமைச்சருக்கு நான் வணக்கம் தெரிவித்தேன்.
பதிலுக்கு அவர் வணக்கம் கூறவில்லை. என்னைப் பார்த்தவுடன் அமைச்சர், ஏன்யா நீ ஒரு ........ பிடிஓ, சேர்மேனுக்கு மட்டும்தான் நீ சப்போர்ட் பண்ணுவ, சேர்மேன் சொல்வதை மட்டும்தான் நீ கேட்ப, மற்றவர்கள் யார் சொன்னாலும் நீ கேட்க மாட்ட, யார் போன் செய்தாலும் எடுக்க மாட்ட, நீ ஒரு ......... சேர்ந்த பிடிஓ தானே? இந்த பிளாக்ல, நீ ..... பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் உன்னை வைத்துள்ளேன்.
உன்னை உடனே டிரான்ஸ்பர் செய்து இந்த மாவட்டத்தை விட்டு வேறு மாவட்டத்துக்கு மாற்றிவிடுவேன். முதன்மைச் செயலாளர் அவரது பெயரையும் உச்சரித்து, பலமுறை என்னை ...... பிரிவைச் சேர்ந்த பிடிஓ என்பதைக் குறிப்பிட்டு அமைச்சர் ராஜகண்ணப்பன் ஒருமையில் பேசினார்.
சாதி பெயரை சொல்லி திட்டிய அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விமர்சனங்கள் எழுத நிலையில், அவரிடம் இருந்த போக்குவரத்து துறை பறிக்கப்பட்டு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கும், சிவசங்கரிடம் இருந்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
3.உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி
கடந்த ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி சென்னையில் நடந்த ”இப்போ பஸ்ல எப்டி போறீங்க..! எல்லா ஓசி பஸ்ல போறீங்க..!” என்று பேசிய பொன்முடியின் பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. விமர்சனங்கள் கடுமையானதும் ‘விளையாட்டாக பேசியதாக’ கூறி சமாளித்திருந்தார் பொன்முடி.
இந்த சர்ச்சை ஓய்வதற்குள், விழுப்புரம் மாவட்டம் சித்தலிங்கமடத்தில் வருவாய் மாவட்டம் பிரிக்கும் பிரச்னையில் போராடிய கிராம மக்களை பார்க்க சென்ற அமைச்சர் பொன்முடி “யோவ் இருயா” என்று ஒருமையில் பேசும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஆனது.
மேலும் கடந்த மார்ச் 6 விழுப்புரம் மாவட்டம் அருங்குறுவையில் கிராமத்தில் தெரு விளக்கு வசதி, சாலை வசதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி பேசிய போது ’வீட்டுக்கு தண்ணீரே வரவில்லை’ என்று கூட்டத்தில் இருந்த சில பெண்கள் சொல்ல “அப்படியே ஓட்டுப்போட்டு கிழிகிழின்னு கிழிச்சிட்டீங்க அத வந்து கேக்குறீங்க” என்று பேசும் பொன்முடியின் வீடியோ பொதுமக்கள் மட்டுமின்றி கட்சிகாரர்களின் விமர்சனங்களுக்கும் உள்ளானது.
2.நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்
கடந்த மே 2ஆம் தேதி வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் துரைமுருகன், "செப்டம்பர் 15ம் தேதி முதல் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் மாதம் கொடுக்க போகிறோம். நீங்களே செலவுக்கு வாங்கிக்கொள்ளலாம். அப்படியே மனைவி சம்பாதிப்பதை கணவன் வாங்கி அங்கேயே உட்கார்ந்து சாப்பிட்டு வந்திடலாம். ஆகையினால் குடும்பத்தை காப்பாற்றுவதற்கு இந்த தொகை உதவும்' என்றும்.
மேலும், ''உங்கள் பெண் கல்லூரியில் படிக்கிறார் என்றால், வேலூர் கல்லூரியில் சேர்ந்திருக்கிறார் என்றால், அவங்களுக்கும் ஒரு ஆயிரம் ரூபாய் கையில் கொடுக்கிறோம். உங்க அம்மாவிடம் போய் பஸ்சுக்கு கேட்காதே.. நீ பசங்களோட சினிமாவுக்கு போனீன்னா அங்க பணம் கேட்காதே.. ஒரு செல்போன் வாங்கி வைத்துக்கொள்.. நைசாக பேசு, என்ன வேணும்னாலும் பண்ணு, அதுக்கும் ஒரு ஆயிரம் கொடுக்கிறோம்" என்று பேசும் வீடியோ மக்களை முகம் சுளிக்க வைத்தது.
1.நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
பேசினால், எழுதினால், நடந்தால், நிமிர்ந்தால் என எல்லா விதத்திலும் சர்ச்சைக்குள்ளான நபராக உள்ளார் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். நன்கு படித்தவர், நேர்மையானவர், விஷயம் தெரிந்தவர் என்ற சொல்லாடல்கள் எல்லாம் அவரின் பிளஸ்களாக பார்க்கப்படுகிறது.
இத்தனையும் இருந்தாலும் கடந்த 2ஆண்டுகளை உற்றுநோக்கினால் ’சர்ச்சைகளுக்கு பிடிஆரை பிடிக்கிறதா? அல்லது பிடிஆருக்கு சர்ச்சைகள் பிடித்திருக்கிறதா’ என்ற தலைப்பில் ஒரு பிஹெச்டியையே செய்துவிட முடியும். அந்த அளவுக்கு சர்ச்சைகளின் நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நிதியமைச்சர்.
பெரும்பாலும் இவரது மேடை பேச்சுகளை விட இவரின் ட்வீட்களும், ஊடக பேட்டிகளும் தான் பல சங்கடத்தை கொடுத்துள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பிடிஆர் பேசிய பேச்சுக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்த நிலையில் இது குறித்து ட்வீட் செய்திருந்த பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனை ப்ளாக் செய்தார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இலவச திட்டங்கள் குறித்து பேசிய இவரின் வீடியோ வட இந்தியாவில் வைரல் ஆனதுடன் இவருக்கு மட்டுமின்றி திமுகவிற்கும் பாராட்டுகளை பெற்றுத்தந்துள்ளன ஆனாலும் சர்ச்சைகள் தொடர்கின்றன.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உடனான ட்விட்டர் மோதலில் ஆடு என அவரை விமர்சித்திருந்த நிலையில் ”மூதாதையர்களின் பெருமிதத்தில் வாழும் நீங்களும் உங்கள் கூட்டமும் தானாக தன்னை உருவக்கிக்கொண்ட ஒரு விவசாயியின் மகனை மனிதனாக ஏற்க முடியவில்லை” என பதிலளித்திருந்தார்.
இந்த பிரச்னைகளுக்கு மத்தியில் ட்விட்டரில் விவாதம் செய்வதை நிதியமைச்சர் குறைத்துக் கொண்ட நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சபரீசன் ஆகியோர் 30 ஆயிரம் கோடி சொத்து சேர்த்துவிட்டதாக பிடிஆர் பேசியதாக பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர், அண்ணாமலை ஆகியோர் வெளியிட்ட ஆடியோ சர்ச்சைகளின் மகுடமாக மாறி உள்ளது.
அந்த ஆடியோவில் பேசியது நான் இல்லை, திட்டமிட்டு பரப்பபடுகிறது என்ற பிடிஆரின் விளக்கம் ஏற்றுக் கொள்ளும் படி இருந்தாலும் மீம்ஸ் போட்டதற்காக கைது செய்யும் திமுக அரசு பொய் செய்தியை பரப்பிய சவுக்கு சங்கர், அண்ணாமலை ஆகியோர் மீது இதுவரை ஒரு வழக்கு கூட தொடுக்காதது ஏன் என்ற கேள்வியை நடுநிலையாளர்கள் எழுப்புகின்றனர்.
’பேசி பேசியே ஆட்சியை பிடித்த இயக்கம்’ என்ற பெயர் இந்தியாவிலேயே திமுக என்ற ஒரு கட்சிக்கு மட்டும்தான் உண்டு. இதில் அதிகாரத்தை அடைய பேச்சு எவ்வுளவு முக்கியம் என்பது இதிலேயே புரிந்து கொள்ளலாம். ’திராவிட மாடல்’ ஆட்சியில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களின் இத்தகைய பேச்சுக்குகள் தொடர்ந்தால் பேசி ஆட்சியை பிடித்த இயக்கம் பேச்சாலேயே ஆட்சியை இழந்த வரலாற்றை காலம் ஏற்படுத்தி செல்லும் என்பது நிதர்சனமான உண்மை.