BSP Armstrong Murder: தமிழகத்தை அதிரவைத்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. மேலும் 3 பேர் கைது..உடல் அடக்கம் குறித்து பிரச்னை..!
Jul 07, 2024, 09:06 AM IST
BSP Armstrong Murder: படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி சென்னை வர உள்ள நிலையில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
BSP Armstrong Murder case: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை அவரது வீட்டின் அருகே வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவத்திற்கு பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உள்பட பல கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த படுகொலை தொடர்பாக செம்பியம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்டமாக வடசென்னை காவல் கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த வழக்கு தொடர்பாக ராணிப்பேட்டை மாவட்டம், காட்பாடி அருகே உள்ள பொன்னை பகுதியைச் சேர்ந்த பாலு, சந்தோஷ், பெரம்பூர் பொன்னுசாமி நகர், 3-வது தெருவைச் சேர்ந்த திருமலை, திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையைச் சேர்ந்த மணிவண்ணன், குன்றத்தூர் திருவேங்கடம், திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த ராமு என்ற வினோத், அதே பகுதியைச் சேர்ந்த அருள், செல்வராஜ் ஆகிய 8 பேர் அண்ணாநகர் காவல் துணை ஆணையர் முன்பு சனிக்கிழமை சரணடைந்தனர். அவர்களை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
மேலும் 3 பேர் கைது
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த விஜய், கோகுல், சிவசக்தி ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவர்களை சிறையில் அடைத்தனர்.
மாயாவதி வருகை
ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தவும், இறுதி நிகழ்வில் பங்கேற்கவும் உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவருமான மாயாவதி தனி விமானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு சென்னை வருகிறார். மாயாவதியின் வருகையையொட்டி பாதுகாப்பு பணிகளில் ஆயிரக்கணக்கான போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தற்போது பெரம்பூரில் உள்ள சென்னை மாநகராட்சி பந்தர் கார்டன் பள்ளியில் ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்டுள்ளது. முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக தலைவர்கள், பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள், திரையுலகினர், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அடக்கம் செய்ய அனுமதி கோரி வழக்கு
இதனிடையே பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் அலுவலகத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய அனுமதி கோரிய வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று காலை விசாரணைக்கு வர உள்ளது.
சென்னை காவல்ஆணையர் பேட்டி
இதனிடையே சென்னை காவல்ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அடையாளம் தெரியாத சிலர் ஆம்ஸ்ட்ராங் மீது கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளனர் என போலீஸ்க்கு தகவல் வந்தது. சம்பவம் நடந்த இடத்துக்கு காவல்துறையினர் உடனடியாக சென்று ஆம்ஸ்ட்ராங்கை மருத்துவமனை கொண்டு சென்றனர். கொலை நடந்த 3 மணி நேரத்துக்குள் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது வரை விசாரணை நடத்தியதில் ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை. பொன்னை பாலுவின் அண்ணன் ரவுடி ஆற்காடு சுரேஷ்,சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது சில சம்பவம் நடைபெற்றது. எனவே அந்த சம்பவம் குறித்தும், பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை விசாரணையில் கிடைத்த தகவல்களை மட்டுமே கூறியுள்ளோம். முழுமையான விசாரணைக்குப் பிறகே கொலைக்கான காரணம் தெரிய வரும் என்று தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9