சென்னையில் ஷாக்.. 10 வயது சிறுவனை காவு வாங்கிய டெங்கு காய்ச்சல்
Oct 17, 2023, 01:10 PM IST
Dengue: சென்னை பூவிருந்தவல்லி அருகே டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் சென்னை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த சிறுவன் இன்று அதிகாலை சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாடு முழுவதும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை 5,000க்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் கொசு மற்றும் டெங்கு ஒழிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
இதனிடையே இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி, தினமும் 300- 400 நபர்கள் டெங்குவால் பாதிக்கப்படுகின்றனர். அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் செவிலியர்களுக்கு அதிக அழுத்தம் எனத் தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் சென்னை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த சிறுவன் இன்று அதிகாலை சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, பூவிருந்தவல்லி அருகே சென்னீர்குப்பத்தைச் சேர்ந்த சிறுவன் சரவணன் (10) கடந்த 8ஆம் தேதி முதல் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளான். சிறுவன் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் முதலில் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். அப்போது சிறுவனுக்கு ரத்த அணுக்கள் குறைய துவக்கியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக எழும்பூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தார்.
சிறுவனுக்கு ரத்த அணுக்கள் குறைதல், ரத்தம் உறைதல் போன்ற டெங்கு அறிகுறிகள் இருந்ததால் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்