100 Years of Kalaignar: கருணாநிதி தோற்றம் முதல் மறைவு வரை- சுவாரஸ்ய தகவல்கள்!
Jun 03, 2023, 06:45 AM IST
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தோற்றம் முதல் மறைவு வரை நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளின் தொகுப்பு இதோ..!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தோற்றம் முதல் மறைவு வரை நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளின் தொகுப்பு இதோ..!
இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமைமிக்க தலைவர்களில் ஒருவரான கருணாநிதியின் 100-வது பிறந்த நாள் விழா இன்று (ஜூன் 3) கொண்டாடப்படுகிறது. இந்நாளில் கருணாநிதியின் தோற்றம் முதல் மறைவு வரை நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளின் சிறப்பு தொகுப்பு இதோ..!
- நாகப்பட்டின் மாவட்டத்தில் திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924ஆம் ஆண்டு ஜூன் 3-ல் முத்துவேலர்- அஞ்சுகம் அம்மையார் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.
- வளர்த்தெடுத்த ஊர் திருக்குவளை என்றாலும், கருணாநிதியை அரசியல் ரீதியாக வளர்த்தெடுத்த ஊர் திருவாரூர்.
- தனது 14ஆவது வயதில் சமூக இயக்கங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
- 1941: தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் என்ற அமைப்பை தொடங்கினார் கருணாநிதி.
- 1944 பேபி டாக்கீஸ் என்று அழைக்கப்பட்ட திருவாரூர் கருணாநிதி திரையரங்கில் தன்னுடைய முதல் நாடகமான ‘சாந்தா (அல்லது) பழனியப்பன் ‘ நாடகத்தை அரங்கேற்றினார்.
- 1946: முதல் திரைப்படமான ‘இராஜகுமாரி’ க்கு கதை வசனம் எழுதினார்.
- 1949: சென்னை ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையில் திராவிட முன்னேற்றக் கழகத்தை அறிஞர் அண்ணா துவங்கினார். அண்ணாவின் படைத்தளபதியாக விளங்கிய கருணாநிதி திமுகவின் பொதுக்குழு மற்றும் பிரச்சாரக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
- 1950: கருணாநிதி கதை-வசனம் எழுதிய, எம்.ஜி.ஆர். நடித்த "மந்திரிகுமாரி" திரைப்படம் வெளியானது.
- 1951: திரைப்படப் பணி , கட்சிப்பணி ஆகியவற்றிற்கு இடையேயும் பத்திரிக்கைத்துறையில் ‘மாலைமணி’ இதழின் ஆசிரியராக பொறுப்பேற்றார்.
- 1952: கருணாநிதிக்கு அழியாப் புகழைத் தேடித்தந்த, சிவாஜி கணேசனை திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய 'பராசக்தி' திரைப்படம் வெளியானது.
- 1953 ஜூலை 14, 15: "டால்மியா" புரம் என்ற பெயரைக் கல்லக்குடி என பெயர் மாற்றம் செய்ய வேண்டுமெனக் கோரியும், குலக் கல்வி திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் திமுக போராட்டம் நடத்தியது. தண்டவாளத்தில் படுத்து கருணாநிதி போராட்டம் நடத்தினார்.
- 1957: குளித்தலை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு முதல்முறையாக எம்எல்ஏ ஆனார்.
- 1961: திமுகவின் பொருளாளராக நியமிக்கப்பட்டார்.
- 1962: தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக பதவியேற்றார் கருணாநிதி.
- 1967: சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக ஆட்சியைப் பிடித்தது. கருணாநிதி பொதுப் பணித்துறை அமைச்சராகப் பதவியேற்றார்.
- 1969 பிப்ரவரி 10: அண்ணாவின் மறைவுக்குப் பின் , தி.மு.க.வின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக முதலமைச்சராக முதன்முறையாகப் பதவியேற்றார்.
- 1971: இரண்டாவது முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சரானார் கருணாநிதி.
- 1989: தமிழ்நாட்டின் முதலமைச்சராக 3-வது முறையாக பொறுப்பேற்றார்.
- 1996: தமிழ்நாட்டின் முதலமைச்சராக நான்காவது முறையாக பதவியேற்றார்.
- 1996-2001 ஆண்டு காலத்தில் அவர் முதலமைச்சராக இருந்தபோது சமத்துவத்தை முன்னிறுத்தவும் சாதி, மத பேதங்களைக் களையவும் தமிழ்நாட்டில் சமத்துவபுரங்களை உருவாக்கினார்.
- 2006: தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஐந்தாவது முறையாக பொறுப்பேற்றார் கருணாநிதி.
- 2008: தை முதல் நாளை தமிழ் புத்தாண்டு நாள் என சட்டம் நிறைவேற்றம்.
- பிப்.11, 2009: கருணாநிதிக்கு முதுகுத் தண்டு அறுவை சிகிச்சை நடைபெற்றது.
- மே 19, 2016: திருவாரூர் தொகுதியில் 68 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று 13 முறையாக வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார்.
- டிச.1, 2016: உடல் நலக் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிப்பட்டார்.
- டிச.23, 2016: உடல் நலம் தேறி இல்லம் திரும்பினார்.
- டிச.16, 2017: ஓராண்டுக்கு பிறகு திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் சென்றார்.
- ஜூலை 27, 2018: நள்ளிரவுக்கு பிறகு உடல்நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதி அழைத்துச் செல்லப்பட்டார்.
- ஆகஸ்ட் 7, 2018: காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மு.கருணாநிதி மாலை 6.10 மணியளவில் காலமானார்.
- ஆகஸ்ட் 8, 2018: 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் திமுகவின் தலைவர் கருணாநிதியின் உடல் மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டது.
டாபிக்ஸ்