Zimbabwe: உலகக் கோப்பை தகுதிச்சுற்றில் இருந்து வெளியேறியது ஜிம்பாப்வே
Jul 04, 2023, 09:27 PM IST
இந்தியாவில் அக்டோபர்-நவம்பரில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன.
உலகக் கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டியில் சிறப்பாக விளையாடி வந்த ஜிம்பாப்வே சூப்பர் சிக்ஸ் சுற்றில் 2 ஆட்டங்களில் தோல்வி அடைந்து உலகக் கோப்பைக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
ஏற்கனவே முன்னாள் உலகக் கோப்பை சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், தகுதிச்சுற்றுடன் முதல் முறையாக வெளியேறி இருந்தது.
தற்போது ஜிம்பாப்வே அணியும் அந்த லிஸ்ட்டில் இணைந்துள்ளது.
உலகக் கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டிகள் நடந்து வருவதும் ஜிம்பாப்வேயில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் அக்டோபர்-நவம்பரில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன.
ஏற்கனவே டாப் 8 அணிகள் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டன. எஞ்சியுள்ள 2 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் ஜிம்பாப்வேயில் நடந்து வந்தன.
இதில், இலங்கை வெற்றி பெற்று உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது.
இந்தத் தகுதிச்சுற்றில் ஓர் ஆட்டத்தில் கூட தோற்காமல் வீறு நடைப் போட்டு வருகிறது இலங்கை.
வரும் வெள்ளிக்கிழமை வெஸ்ட் இண்டீஸ் அணியை சந்திக்கிறது இலங்கை.
சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறிய 6 அணிகளில் இதுவரை ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், ஓமன் ஆகிய அணிகள் வெளியேறிவிட்டன.
ரேஸில் தற்போது ஸ்காட்லாந்தும், நெதர்லாந்தும் உள்ளன.
கடைசி சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் இரு அணிகளும் மோதுகின்றன.
அந்த ஆட்டத்தில் அதிக ரன் ரேட்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து ஜெயித்தால் அந்த அணி தகுதி பெற வாய்ப்புள்ளது.
அதேநேரம், நெதர்லாந்து தோற்றால் ஸ்காட்லாந்து தகுதி பெறும்.
முன்னதாக, இன்று நடைபெற்ற சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து ஸ்காட்லாந்து முதலில் விளையாடியது.
அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 234 ரன்களை எடுத்தது.
அதிகபட்சமாக மைக்கேல் லீஸ்க் 48 ரன்களை விளாசினார். ஜிம்பாப்வே வீரர் சான் வில்லியம்ஸ் 3 விக்கெட்டுகளையும், சதாரா 2 விக்கெட்டுகளையும் சுருட்டினர்.
இதையடுத்து, 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஜிம்பாப்வே ஆரம்பம் முதலே சொதப்பியது.
ரயான் பர்ல் மட்டுமே நின்று விளையாடி 83 ரன்களை விளாசினார். ஆனால், அந்த அணி 41.1 ஓவர்களில் 203 ரன்களில் சுருண்டது.
ஸ்காட்லாந்து அபாரமாக பந்துவீசி அசத்தியது.
கிறிஸ் சோல் 3 விக்கெட்டுகளையும், பிராண்டன், மைக்கேல் லீஸ்க் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
டாபிக்ஸ்